×

பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்

ஊட்டி: ஊட்டி அருகேயுள்ள பைக்காரா அணையில் இருந்து மின் உற்பத்திக்காக நாள் தோறும் தண்ணீர் எடுத்து வரும் நிலையில் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்துள்ளதால் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் 100 படிகள் இறங்க வேண்டியுள்ளது. ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா,படகு இல்லம்,ரோஜா பூங்கா மற்றும் தொட்டபெட்டாவை கண்டு ரசித்த பின் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பைக்கார படகு செல்லத்திற்கு செல்கின்றனர்.இயற்கை எழில் சூழ்ந்த பைக்காரா அணையில் படகு சவாரி செய்வதில் சுற்றுலா பயணிகள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பைக்காரா அணை மின் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால், இந்த அணையில் தண்ணீரை கொண்டு பைக்காரா நுண்புணல் மின் நிலையம், மாயார், மரவக்கண்டி ஆகிய நீர் மின் நிலையங்களின் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பைக்காரா அணையில் இருந்து நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்வதற்காக தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால், நாள் தோறும் நீரின் அளவு குறைந்துக் கொண்டே செல்கிறது. தற்போது பல அடிக்கு கீழே தண்ணீரின் அளவு சென்றுள்ளது. 100 அடி உள்ள இந்த அணையில் தற்போது 50 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் படகு நிறுத்துமிடமும் (மிதக்கும் படகு நிறுத்தும் தளம்) தாழ்வான பகுதிக்கு சென்றுவிட்டது. தற்போது, பைக்காரா அணையில் படகு சவாரி செய்ய வேண்டுமாயின் சுமார் 100 படிகள் கீழே இறங்கி சென்ற பின்னரே படகு நிறுத்தும் இடத்தை அடைய முடியும்.

இதனால், வயதானவர்கள், உடல் பருமனானவர்கள் மற்றும் சிறிய குழந்தைகள் படியிறங்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர்ந்து மின் உற்பத்திக்காக அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலையில் கோடையில் அணையின் நீர்மட்டம் மிகவும் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

The post பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Baikara Dam ,Ooty ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...