×

வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில் 406 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட வராதது ஏன்?: பொறியாளர்கள் ஆய்வு செய்ய உத்தரவு

* தமிழக பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் 14,139 ஏரிகள் உள்ளன.
* இதில் 5,228 ஏரிகள் தற்போது பெய்த மழையில் முழு கொள்ளளவை எட்டின.
* சென்னையில் மட்டும் 28 ஏரிகளில் 22 ஏரிகள் நிரம்பின.
* செங்கல்பட்டு மாவட்டத்தில் 530 ஏரிகள் நிரம்பின.

சென்னை: வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்த நிலையில் 406 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட வராதது ஏன்? என்பது தொடர்பாக பொறியாளர்கள் ஆய்வு செய்ய பொதுப்பணித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20ம் தேதி தொடங்கிய நிலையில் கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த பருவமழை சராசரி அளவை காட்டிலும் கூடுதலாக பதிவானது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 14,139 ஏரிகளில் 5,228 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. குறிப்பாக, 28 ஏரிகளை கொண்ட சென்னை மாவட்டத்தில் 22 ஏரிகளும், 564 ஏரிகளை கொண்ட செங்கல்பட்டு மாவட்டத்தில் 530ம், 228 ஏரிகளை கொண்ட கடலூரில் 122ம், 190 ஏரிகளை கொண்ட திண்டுக்கல்லில் 85ம், 381 ஏரிகளை கொண்ட காஞ்சிபுரத்தில் 327ம், 325 ஏரிகளை கொண்ட கள்ளக்குறிச்சியில் 216ம், 1,340 ஏரிகளை கொண்ட மதுரை மாவட்டத்தில் 462ம், 2,040 ஏரிகளை கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் 310ம், 369 ஏரிகளை கொண்ட ராணிப்பேட்டையில் 170ம், 543 ஏரிகளை கொண்ட தென்காசியில் 264ம், 640 ஏரிகளை கொண்ட தஞ்சையில் 530ம், 781 ஏரிகளை கொண்ட நெல்லையில் 212ம், 578 ஏரிகளை கொண்ட திருவள்ளூரில் 377ம், 697 ஏரிகளை கொண்ட திருவண்ணாமலையில் 294ம், 517 ஏரிகளை கொண்ட விழுப்புரத்தில் 377ம், 342 ஏரிகளை கொண்ட விருதுநகரில் 103 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

91 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை 730 ஏரிகளும், 81 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை 729 ஏரிகளும், 71 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை 1422 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை 1,327 ஏரிகளும், 26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 2,225 ஏரிகளும், 1 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை 2,072 ஏரிகளிலும் நீர் நிரம்பி உள்ளது.அதே நேரத்தில் தர்மபுரி மாவட்டத்தில் 63 ஏரிகளிலும், திண்டுக்கல் மாவட்டத்தில் 6ம், ஈரோட்டில் 15ம், கன்னியாகுமரியில் 10ம், கரூரில் 7ம், கிருஷ்ணகிரியில் 29ம், மதுரையில் 13ம், நாமக்கல்லில் 55ம், சேலத்தில் 40ம், தென்காசியில் 25ம், தேனியில் 12ம், திருச்சியில் 54, நெல்லையில் 25ம், திருப்பத்தூரில் 23ம், திருப்பூரில் 22ம், வேலூரில் 2ம் என மொத்தம் 406 ஏரிகளில் ஒரு சொட்டு கூட நீர் வரவில்லை. இது, பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, அந்த ஏரிகளில் நீர்வரத்து இல்லாததற்கு என்ன காரணம் என்பது குறித்து ஆய்வு செய்ய நீர்வளப்பிரிவு முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மண்டல தலைமை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்பேரில் அந்த ஏரிகளில் பொறியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : lakes ,Engineers , With the northeast monsoon pouring Why not even a drop of water comes in 406 lakes ?: Engineers Order to inspect
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...