வெளிப்படையாக ஊழல் செய்பவர் வேலுமணி; கமுக்கமாக ஊழல் செய்பவர் தங்கமணி: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு மடல்.!!!

சென்னை: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய மடலில், உதயசூரியனின் வெளிச்சக் கதிர்கள் தமிழ்நாடெங்கும் ஒளியூட்டி வருவதை, கழகம் நடத்துகின்ற ஒவ்வொரு மக்கள் கிராம சபைக் கூட்டத்திலும் பங்கேற்கும் மக்களின், குறிப்பாக பெண்களின் மனதிலிருந்து ஒலிக்கும் குரலில் இருந்து தெளிவாக உணர முடிகிறது. அதர்ம ஆட்சியாளர்களின் அக்கிரமச் செயல்பாடுகளிலிருந்து தமிழகத்தை மீட்பதற்கு, ஆட்சி மாற்றம் நிச்சயம் தேவை என தி.மு.கழகத்தைவிட, பொதுமக்கள் மிகத் தீவிரமாக உள்ள நிலையில்தான், தருமபுரி மாவட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகனின் பாலக்கோடு தொகுதியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் ஜனவரி 18-ஆம் தேதி பங்கேற்றேன்.

அ.தி.மு.க. ஆட்சி சொன்னது என்ன, செய்தது என்ன என்பதையும், எந்தளவில் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையும், இந்த முறை மேற்கொண்ட பயணத்தில் காணொலிக் காட்சிகள் வாயிலாக ஆதாரத்துடன் பொதுமக்களிடம் எடுத்துக் காட்டியபோது, மக்களிடம் அதற்கு பெரும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக, ஊர் ஊராகச் சென்று பழைய வெல்ல மூட்டைகள் போல, புதிய பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டிவரும் முதலமைச்சர் பழனிசாமியின் போலி வாக்குறுதிகளை, அவர் வார்த்தைகளாலேயே  மக்களிடம் அம்பலப்படுத்த முடிந்தது.

உயர்கல்வித்துறை அமைச்சராக உள்ள கே.பி.அன்பழகனின் தொகுதியில், மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் தரம் தாழ்ந்த நிலையில் இருப்பதை, மக்களின் வேதனைக் குரல் மூலம் அறிய முடிந்தது.அத்தனை அவலங்களும் இன்னும் 4 மாதங்கள்தான்; அதன்பிறகு மக்கள் ஏற்படுத்தப் போகும் ஆட்சி மாற்றத்தினால் மாநிலத்திற்கான அனைத்துத் தேவைகளும் நிறைவேறும் என்ற நம்பிக்கையினையும்,  உறுதியையும் அவர்களுக்கு வழங்கினேன். தருமபுரி மாவட்ட நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, சேலம் நோக்கி வரும் வழியெங்கும் மக்களின் பேராதரவும் பெருகிவரும் அன்பும் கழகத்தின்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எடுத்துக் காட்டியது.

அங்கிருந்து சேலம் மாவட்டத்திற்கு வந்தபோது, தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி அவர்களின் தொகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றேன். சேலம் மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் செல்வகணபதி அவர்கள் பிரம்மாண்ட ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வெற்றி நடைபோடும் தமிழகம் என, மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொட்டி வெற்று, விளம்பரங்களை நாள்தோறும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் பழனிசாமி, தன்னுடைய சொந்தத் தொகுதியிலேயே தமிழகத்தை எந்தளவு தலைகுனிய வைத்திருக்கிறார் என்பது, எடப்பாடியில் வெட்ட வெளிச்சமாகத் தெரியவந்தது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்களிடம் வாங்கிய மனுக்களின் மீது மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார் என்று தனது பிரச்சாரக் கூட்டங்களில் கொஞ்சம் கூட அர்த்தமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருக்கிறார், உரிய நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் பழனிசாமி. ஆனால், அவரது சொந்தத் தொகுதி மக்களுக்கே அவர் எதுவும் செய்யவில்லை என்பதை எடப்பாடியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தின்போது, பட்டதாரி இளைஞர்களும் பெண்களும் தி.மு.க.வை நம்பி வழங்கிய மனுக்களும் வேலைக்காகப் பதிவு செய்துவிட்டு, முதலமைச்சரின் தொகுதியில் மட்டும் காத்திருக்கும் 9,600 பேரின் விண்ணப்பங்களுமே எடுத்துக் காட்டுவதாக இருந்தன.

வாக்களித்த மக்களைப் புறக்கணித்துவிட்டு, அதிகாரப் பதவிக்கும் அதன்மூலம் அடிக்கும் கொள்ளைக்குமாக மத்தியில் ஆட்சி செய்வோரிடம் அடிமைத்தனச் சேவகம் செய்யும் பழனிசாமியால், தங்கள் ஊருக்கே அவப்பெயர் என்றும், இனி அவரது பெயருடன் எடப்பாடி ஊரின் பெயரை இணைத்துச் சொல்ல வேண்டாம் என்றும், சொந்த ஊர் மக்களே வேதனையோடு சொன்னதால், இனி அவரை பழனிசாமி என்று மட்டுமே அழைப்பது என முடிவெடுத்தேன். சொந்தத் தொகுதி மக்களையே கவனிக்காதவர், மற்ற தொகுதிகளின் மக்களை எங்கே கவனிப்பார்? அத்தனை அவமானங்களும் அவலமும் இன்னும் நான்கைந்து மாதங்களுக்குத்தான் என்பதையும்,

இருண்டு கிடக்கும் தமிழகத்தில் அதன்பிறகு விடியல் ஏற்படும் என்பதையும், எடப்பாடி தொகுதி மக்களிடம் தெரிவித்தேன். மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் ஆரவாரம் செய்து அன்புடன் வழியனுப்பி வைத்தனர். ஜனவரி 19-ஆம் நாள் நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் தங்கமணி தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதி - பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றேன். வழக்கம்போலவே, ஆண்களை விட பல மடங்கில் பெண்கள் திரண்டிருந்தனர். தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே...! உங்களை மட்டும் நம்பியே, உங்களில் ஒருவனான நான் இதனை வெளியிடப் போகிறேன். 200 தொகுதிகளுக்குக் குறையாத இணையிலா வெற்றியைக் குவித்து, அதனை தலைவர் கலைஞர் அவர்களின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கிடும் ஒற்றை இலக்குடன் அடுத்த கட்டப் பரப்புரைக்கு ஆயத்தமாவீர்! என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>