உறைகிணறுகளை சீரமைப்பதில் காலதாமதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு வாரமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு: பொதுமக்கள் தவிப்பு

நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக குடிநீர் விநியோகம் செய்யும் உறை கிணறுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.பொங்கல் பண்டிகையை ஒட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 10 நாட்களாக கனமழை பெய்தது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பிய நிலையில் அணைகளுக்கு அதிக நீர் வரத்து இருந்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பாய்ந்தது. இதில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் உறைகிணறுகள், அதற்கான மோட்டார்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாமிரபரணி நீர் ஆதாரத்தை நம்பி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இரண்டு மாநகராட்சிகள், 9 நகராட்சிகள், 55 டவுன் பஞ்சாயத்துகள், 828 கிராம பஞ்சாயத்துகளுக்கும், விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களும் உள்ளன.

தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறுகளும், பம்பிங் ஸ்டேஷன்களும் வெள்ளத்தில் சேதம் அடைந்ததால், அவற்றை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. நெல்லை மாநகராட்சியில் ஏற்கனவே பொங்கலையொட்டி 3 நாட்கள் குடிநீர் இருக்காது என மாநகராட்சி அறிவித்தது. ஆனால் ஒருவாரம் கடந்தும் இன்னமும் பல பகுதிகளுக்கு குடிநீர் வந்தபாடில்லை. குறிப்பாக கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, தச்சநல்லூர், குறிச்சி, மேலப்பாளையம், திருமால் நகர் விரிவாக்கப் பகுதி, அழகர் நகர், பாளை. கேடிசிநகர் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தொடர்கிறது.

சேரன்மகாதேவி, அம்பை சுற்று வட்டார பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. மணிமுத்தாறு அயன்சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் அணைக்கும், ஆற்றுக்கும் அருகில் இருந்தும் குடிநீரின்றி தவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில் பல கிராமங்களில் இன்று வரை குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. லாரிகள் மூலம் குடிநீர் விநியோகத்தையும் உள்ளாட்சி அமைப்புகள் முறையாக மேற்கொள்வதில்லை. நகர்ப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்திட போதிய குடிநீர் லாரிகளும் இல்லை.

இதனால் பொதுமக்கள் குடங்களை டூவீலர்களில் கட்டிக் கொண்டு, குடிநீர் கிடைக்கும் இடங்களை தேடிச் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். பொங்கலை ஒட்டி மழை பெய்த நிலையில், மழை தண்ணீரை காய்ச்சி மக்கள் பருகி வந்தனர். ஆனால் இப்போது மழைநீரும் கிடைப்பதில்லை. எனவே உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் பகுதிகளில் குடிநீர் உறைகிணறுகளை விரைந்து சீரமைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories:

More
>