×

டிரோன் கேமரா மூலம் 10 இடங்களில் ஆய்வு வெள்ளத்தால் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள், வாழைகள் நாசம்: கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது

நெல்லை: தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர்கள், வாழைகள் சேதமாகியுள்ளன. சேத விவரங்களை அறிய டிரோன் மூலம் 10 இடங்களில் ஆய்வு நடந்தது. வேளாண்மைத் துறையும் வருவாய் துறையும் இணைந்து கணக்கெடுப்பு பணிகளை தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை கொட்டித் தீர்த்தது. முக்கிய அணைகள் நிரம்பிய நிலையில் தாமிரபரணி ஆற்றில் சுமார் 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெருவெள்ளமாக பெருக்கெடுத்தது. இதனால் ஆற்றங்கரையோர வயல்கள், வாழை பயிர்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் சேரன்மகாதேவி, பத்தமடை, கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர், கூனியூர், தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், ஸ்ரீவைகுண்டம், வல்லநாடு அகரம், ஏரல், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள், வாழை பயிர்கள் முழுவதுமாக வெள்ளத்தில் மிதக்கின்றன.

நவம்பர், டிசம்பர் மாதத்தில் நடவு செய்த நெற்பயிர்கள் தற்போது 40 - 50 நாட்கள் கால கட்டத்தில் வளர்ந்துள்ளன. இந்த நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் சாய்ந்து மூழ்கி கிடக்கிறது. இதேபோல வாழை தோட்டங்களிலும் 2 அடி முதல் 5 அடி வரையும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் வாழைகள் சரிந்துள்ளன. கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்த நிலையில் தாமிரபரணியில் வெள்ளம் தணிந்துள்ளது. எனினும் நெல்லை, தூத்துக்குடி ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 40 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள், வாழைகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த நெல்லை கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நெல்லை மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கஜேந்திரபாண்டியன் தலைமையில் வேளாண்மைத் துறையினர் நெல்லை, பாளை., சேரன்மகாதேவி, அம்பை ஆகிய தாலுகாக்களில் வருவாய் துறையினருடன் இணைந்து வெள்ளத்தால் மூழ்கிய நெற்பயிர்கள், வாழைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

முதற்கட்டமாக அம்பை வைராவிகுளம், மன்னார்கோவில், ஆலடியூர், வெள்ளாங்குளி, வி.கே.புரம் பட்டர்குளம், சேரன்மகாதேவி பொழிக்கரை, கரிசூழ்ந்தமங்கலம், கூனியூர், பத்தமடை, திருப்புடைமருதூர் ஆகிய 10 இடங்களில் டிரோன் கேமரா மூலம் நெல், வாழை, உளுந்து பயிர்களில் தண்ணீர் எவ்வளவு தேங்கியுள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து சேதமடைந்த பயிர்கள் குறித்து வேளாண்மைத் துறையும், வருவாய் துறையும் ஆய்வு நடத்தி வருகிறது. வெள்ள நீர் சற்று வடிந்த பிறகு சேதமடைந்த பயிர்களின் முழு விவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுபோல தூத்துக்குடி மாவட்டத்திலும் தாமிரபரணி ஆறு பாயும் வைகுண்டம், ஏரல், திருச்செந்தூர், தூத்துக்குடி ஆகிய தாலுகாக்களில் பயிர்கள் அதிக சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்தும் கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது.

பாபநாசம், வி.கே.புரத்தில் இயல்பு நிலை திரும்பியது
வி.கே.புரம்: கடந்த ஒரு வாரமாக பெய்த தொடர் மழை நேற்று சற்று ஓய்வெடுத்த நிலையில் பாபநாசம் மற்றும் வி.கே.புரம் பகுதி மக்கள் வெயிலை பார்த்தனர். இப்பகுதியில் உள்ள முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் நிரம்பியதால் அதிகபட்சமாக 70 ஆயிரம் கனஅடி வரை உபரிநீர் திறக்கப்பட்டு பல இடங்களில் குடியிருப்புகள், வயல்களில் வெள்ளம் புகுந்தது. வி.கே.புரம் பகுதியில் 5க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.
1992ம் ஆண்டு வி.கே.புரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சம்பவம் மீண்டும் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சத்திலேயே மக்கள் இருந்து வந்தனர். ஆனால் நேற்று அடித்த வெயில், மக்களின் அச்சத்திற்கு முற்றுபுள்ளி வைத்தது. அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பும் குறைந்ததால் வி.கே.புரம் நகராட்சியில் நேற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் திரும்பியது. ஆனால், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை நீடித்து வருகிறது.

வெள்ளத்தில் மூழ்கி 2,000 கோழிகள் சாவு

நெல்லை கருப்பந்துறையைச் சேர்ந்த லூர்து அருள்பிரகாஷ். தாமிரபரணி ஆற்றின் அருகே உள்ள பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். இதில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட புறாக்கள் இருந்தன. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கருப்பந்துறை பகுதியில் பாலத்தை மூழ்கடித்துக் கொண்டு வெள்ளம் சென்றது.  

இதில் கோழிப்பண்ணை மற்றும் புறா செட் நீரில் மூழ்கியது. இதில் 1100 கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 900 கோழிகள் பண்ணையில் இறந்த நிலையில் கிடந்தன. இதுபோல் அங்கு 60 புறாக்கள் இறந்து கிடந்தன. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.11.50 லட்சம் ஆகும். பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில் கோழிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தனவா என்பது குறித்து ஆய்வு நடத்த கால்நடை மருத்துவர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கோழி சாம்பிள்களை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றார்.

மானூரில் 15 ஆயிரம் ஏக்கரில் உளுந்து மீண்டும் முளைத்தது

மானூர் பகுதியில் 15 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட மானாவாரி நிலங்களில் உளுந்து, சிறுபயறு போன்ற பயறு வகைகளை பயிர் செய்திருந்தனர். தற்போது உளுந்து மற்றும் பயறு வகைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மானூர் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக செடியிலேயே பயறு வகைகள் முளைத்து சேதமாகி உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். இதுகுறித்து அழகியபாண்டியபுரம் செட்டிக்குறிச்சியை சேர்ந்த விவசாயி ராமசுப்பு, கானார்பட்டி விவசாய சங்க தலைவர் ஆபிரகாம் கூறியதாவது: மானூர் சுற்றுவட்டாரம், விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட பகுதி.

இப்பகுதியில் 80 சதவீதம் வானம் பார்த்த பூமியாக மானாவாரி நிலங்களே உள்ளன. இந்நிலங்களில் உழுது உளுந்து விதைத்த போது போதுமான மழை இல்லாததால் 15 நாட்கள் தாமதமாக முளைத்தன. பூப்பருவத்தில் திடீரென மழை பெய்ததால் உளுந்து பயிரிலுள்ள பூக்களும் அதிகமாக கீழே விழுந்தன. தற்போது மீண்டும் ஒருவார காலமாக தொடர் மழை பெய்ததால் அனைத்து உளுந்து பயிர்களும் செடியிலேயே முளைத்ததால் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். இதனால் 100 சதவீதமும் உளுந்து நாசமாகி உள்ளது. விதை, உழவு, மருந்து வகைகள், ஆட்கள் கூலி, போன்றவை ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். பலனை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் மழையால் செடியிலேயே பயறுகள் முளைத்து சேதமானதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும், என்றனர்.

Tags : paddy fields , Drone camera, 10 locations, exploration, paddy, bananas, destruction
× RELATED நெல்லையில் டிரோன்கள் பறக்கத் தடை