×

வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகல்..!

டெல்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் உலகின் கவனத்தை ஈர்த்து வருகிறது. டெல்லியில் 45 நாட்களுக்கு மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள். பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள். இதில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்களா? நாங்கள் நிறுத்தி வைக்கவா? என மத்திய அரசிடம் கேட்டது உச்சநீதிமன்றம், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, 3 வேளாண் சட்டங்களுக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

மேலும், 3 வேளாண் சட்டங்களையும் நிறுத்தி வைத்தும், விவசாயிகளுடன் பேசி தீர்வு காண்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை அமைத்தும் உத்தரவிட்டனர். இந்த குழுவில் பூபிந்தர்சிங் பால், பிரேம்குமார் ஜோஷி, அசோக் குலாரி, அனில் கான்வாட் ஆகியோர் இடம் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, விவசாயிகள் தரப்பில் தெரிவித்ததாவது உச்சநீதிமன்றம் இந்த சட்டங்களை நிறுத்தி வைத்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் சட்டங்களை முழுமையாக விலக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே கோரிக்கை. அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. 4 பேர் கொண்ட குழுவை அமைத்து இருப்பதையும் நாங்கள் ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்த 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பூபேந்தர் சிங் விலகியுள்ளார். மக்கள் கருத்தையும் தற்போது நிலவும் சூழலையும் கருத்தில் கொண்டு குழுவில் இருந்து விலகுகிறேன் என பூபேந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Tags : Bhubaneswar Singh ,panel ,Supreme Court , Agricultural Laws, Supreme Court, Committee, Bhupender Singh, Disqualification
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு