×

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை.: வைகோ வரவேற்பு

சென்னை: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்பு தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் 40 நாட்களுக்கு மேலாக அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்தில் இதுவரையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் மத்திய அரசுடன் 8 முறை விவசாயிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நடைபெற்ற விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதிகள், வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் தங்களுக்கு அதிருப்தி அளிப்பதாகவும், அனைத்துத் தரப்பினரையும் ஆலோசித்து, விவாதித்து நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டனர். மேலும் இச்சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். இல்லை என்றால் நாங்கள் இச்சட்டங்களுக்குத் தடை விதிப்போம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.

மேலும் இச்சட்டங்களுக்கு ஆதரவாக ஒரு மனு கூட உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்பதையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இந்நிலையில் இன்று, உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்து இருப்பது வரவேற்கத்தக்கது என்று வைகோ தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து மத்திய அரசு உடனடியாக வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


Tags : Supreme Court ,Waiko ,Central Government , Supreme Court interim injunction on 3 agricultural laws of the Central Government: Waiko welcome
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...