×

தமிழகத்தில் வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும். அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளைத் திறக்க இசைவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது; கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தமிழக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

28.12.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் 2021 ஜனவரி 6 முதல் 8 வரை கருத்து கோரப்பட்டது. இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோர்கள், பள்ளிகளைத் திறக்க தங்கள் இசைவினை அளித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கை அளித்துள்ளதை கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணாக்கர்களின் வருங்கால நலனை கருத்தில் கொண்டும், வரும் 19.1.2021ம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும்.

பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணாக்கர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Schools ,Palanisamy ,classes ,Tamil Nadu ,announcement , Schools to be opened for 10th and 12th classes from 19th in Tamil Nadu: Chief Minister Palanisamy's announcement
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...