×

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும்! : ராமதாஸ் வேண்டுகோள்!!

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை : ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படித்து, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்.எல்.சி) தொழில் பழகுநர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு வேலை வழங்குவதை 26 ஆண்டுகளாக என்.எல்.சி நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது. ஐ.டி.ஐ. படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் வேலையின்றி அவதிப்படும் நிலையில், அவர்களுக்கு வேலை வழங்க என்.எல்.சி நிர்வாகம் மறுப்பது கண்டிக்கத்தக்கது.

மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்களில் கடைநிலை தொழில்நுட்பப் பணியாளர் பணியிடங்கள் ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் படித்தவர்களைக் கொண்டு நிரப்பப் படுவது வழக்கம். ஐ.டி.ஐ.களில் பொதுவான தொழிற்பயிற்சி மட்டும் தான் கற்றுத் தரப்படும். தொழிற்சாலைகள் உள்ளிட்ட தொழிற்நிறுவனங்களில் பணி செய்ய சற்று மேம்பட்ட திறன்கள் தேவைப்படும். அதற்கேற்ற வகையில் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழில் பழகுநர் பயிற்சி அளிக்கப்படும். இத்தகையப் பயிற்சி பெற்றவர்களில் பெரும்பான்மையினருக்கு அந்த நிறுவனத்திலேயே வேலை வழங்கப்படும். அதனால், தொழில் பழகுநர் பயிற்சி என்பது ஒரு நிறுவனத்தில்  நிரந்தரமாக பணிக்கு சேருவதற்கான நுழைவாயிலாகவே கருதப்பட்டு வருகிறது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திலும் இதே நடைமுறை தான் 1994-ஆம் ஆண்டு வரையில் வழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், அதன்பின் கடந்த 26 ஆண்டுகளாக என்.எல்.சியில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்; தொழில் பழகுநர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பிற கட்சிகளின் தொழிற்சங்கங்களும் இந்தக் கோரிக்கையை  வழி மொழிந்துள்ளன. ஆனால், இக்கோரிக்கையை என்.எல்.சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை.

என்.எல்.சி நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அந்த அளவுக்கு என்.எல்.சி நிறுவனத்தில் அதிக காலியிடங்கள் உள்ளன. ஆனால், அந்த காலியிடங்களை தொழில் பழகுநர்களைக் கொண்டு நிரப்புவதற்கு பதிலாக தனியார்  மனிதவள நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்துக் கொள்வது தான் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். மனிதவள நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதால் என்.எல்.சி நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு பல வழிகளிலும் பலன் கிடைப்பதால், அதை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக தொழில் பழகுநர்களுக்கு வேலை வழங்க மறுத்து வருகின்றனர். இதனால் தொழில் பழகுநர் பயிற்சி பெற்ற பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை கிடைக்கவில்லை.

என்.எல்.சியில் தொழில் பழகுநர் பயிற்சி முடித்து பணிக்காக காத்திருப்போரில் 99 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள் ஆவர். என்.எல்.சிக்காக நிலம் கொடுத்தவர்கள், முன்னாள் பணியாளர்களின் வாரிசுகள் என அவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் என்.எல்.சியுடன் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களுக்கு பணி வழங்க வேண்டியக் கடமை என்.எல்.சி நிறுவனத்துக்கு உள்ளது. ஆனால், தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் ஒப்பந்தத் தொழிலாளர்களாக நியமிக்கப்படுபவர்களில் பெரும்பான்மையினர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கடலூர் மாவட்ட பூர்வக்குடிமக்கள் தங்களின் வாழ்வாதாரமாக  திகழ்ந்த நிலங்களை விட்டுக் கொடுத்து, அதில் அமைக்கப்பட்ட நிறுவனத்தின் கடைநிலை பணியைக் கூட மண்ணின் மைந்தர்களுக்குக் கொடுக்காமல் எங்கிருந்தோ கூட்டி வரப்பட்டவர்களுக்கு தாரை வார்ப்பதை என்.எல்.சி நிறுவனம் வாடிக்கையாக்கிக் கொண்டால் அதை பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது.

என்.எல்.சியில் தொழில் பழகுநர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி மற்ற நிறுவனங்களில் அளிக்கப்படும் பயிற்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அதனால், அங்கு பயிற்சி பெற்றவர்களால் வேறு நிறுவனங்களில் பணியில் சேர முடியாது. அதனால், அவர்களுக்கு என்.எல்.சி நிறுவனம் வேலை கொடுத்து தான் தீர வேண்டும். அதுமட்டுமின்றி, 2014&ஆம் ஆண்டு தொழிற்சங்கங்களுக்கும், நிர்வாகத்திற்கு இடையே நடைபெற்ற பேச்சுகளின் போது, தொழில்நுட்பப் பணியிடங்களை தொழில் பழகுநர்களைக் கொண்டு நிரப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொழில்பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்று மத்திய அரசின் பல்துறை அமைச்சகக் குழு முடிவெடுத்துள்ளது. இவ்வளவுக்கும்  பிறகு தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

எனவே, என்.எல்.சி நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படிப்பு மற்றும் தொழில் பழகுநர் பயிற்சியை அடிப்படைத் தகுதியாகக் கொண்ட பணிகளில் காலியிடங்களின் எண்ணிக்கை விவரங்களை என்.எல்.சி நிர்வாகம் உடனடியாக வெளியிட வேண்டும். அந்த இடங்களை வேலைவாய்ப்பக பதிவு மூப்பின் அடிப்படையில் நிரப்ப வேண்டும். இனி வரும் காலங்களில் அதிகாரிகள் அல்லாத பணிகளை மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும். அவ்வாறு செய்ய என்.எல்.சி நிர்வாகம் தவறினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. நடத்தும் என்று எச்சரிக்கிறேன்.

Tags : Neyveli Brown Coal Company ,Tamil Nadu , Ramadas, request
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...