பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகளுக்கும் அதிமுக-வின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும் :உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

சென்னை : கைதான குற்றவாளிகளுக்கும் அதிமுக-வின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பெண்களின் புகார்களின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆளும் அதிமுகவை சேர்ந்த பிரமுகர்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு இருந்ததால் வழக்கு சிபிஐ வசம் சென்றது. தற்போது மேலும் மூன்று பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், மைக் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 15 நாள்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பரவ தொடங்கிய சில மனிநேங்களிலேயே பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “‘பெண்களுக்கு அதிகாரம் அளித்தோம்’ என அரசுப்பணத்தில் அடிமைகள் விளம்பரம் செய்து கொண்டுள்ள இந்த நாளில் அதிமுக நகர மாணவரணி செயலாளர் உட்பட 3 பேர் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளனர். வன்கொடுமை குற்றவாளிகளை பாதுகாப்பது தான் அதிகாரமளித்தலா? #பெண்களின்_எதிரி_அதிமுக அதிமுகவின் பெரிய இடத்துப் பிள்ளைகளுக்கு பொள்ளாச்சி வழக்கில் தொடர்புள்ளது என தலைவர் ஸ்டாலின் அவர்கள் அன்றே சொன்னார். கைதான குற்றவாளிகளுக்கும் அதிமுக-வின் மாண்புமிகுக்களுக்கும் உள்ள தொடர்புகளையும் விசாரிக்க வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி கிடைக்கும்” என்றார்.

Related Stories:

>