×

தங்கம் விலை கிடு,கிடு ஒரே நாளில் ரூ.536 அதிகரிப்பு: சவரன் ரூ.39 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை நேற்று கிடுகிடுவென ரூ.536 அதிகரித்தது. சவரன் 39 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. கடந்த 30ம் தேதி ஒரு சவன் ரூ.37,696க்கும், 31ம் தேதி ரூ.37,800, ஜனவரி 1ம் தேதி ரூ.37,880க்கும் விற்கப்பட்டது. 2ம் தேதி கிராமுக்கு ரூ.13 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,748க்கும், சவரன் ரூ.104 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,984க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.36, சவரனுக்கு ரூ.288 அளவுக்கு அதிகரித்தது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், சனிக்கிழமை விலையிலேயே தங்கம் விற்பனையானது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை தங்கம் மார்க்கெட் தொடங்கியது. அதில் அதிர்ச்சி தான் காத்திருந்தது. யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தங்கம் விலை உயர்ந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,792க்கும், சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,336க்கும் விற்கப்பட்டது. மாலையில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதே நேரத்தில் சனிக்கிழமை விலையை விட கிடு,கிடுவென அதிகரித்திருந்தது.

கிராம் ரூ.67 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,815, சவரனுக்கு ரூ.536 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38520க்கும் விற்கப்பட்டது. தொடர்ச்சியாக 5 நாட்களில் மட்டும் சவரன் ரூ.824 அளவுக்கு அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சவரன் 39 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. வரும் நாட்களில் பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள், திருமணம் உள்ளிட்ட விஷேச தினங்கள் அதிக அளவில் வருகிறது. இந்த நேரத்தில் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நகை வாங்க சிறுக, சிறுக சேர்த்து வைத்தவர்களுக்கு கூடுதல் செலவையும், சுமையையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Shaver , Gold prices rise by Rs 536 in a single day: Shaver approaches Rs 39,000
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...