×

ஆக்கிரமிப்பின் பிடியில் மதுரை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரம் புதர் மண்டிக் கிடக்கும் வண்டியூர் கண்மாய்

* தூர்வாராததால் தண்ணீர் தேங்க வழியில்லை
* படகு போக்குவரத்து நிறுத்தம்
* நிலத்தடி நீர்மட்டத்துக்கு சிக்கல்

மதுரை: மதுரை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான வண்டியூர் கண்மாய் புதர் மண்டி ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகரின் பெரிய கண்மாய்களில் வண்டியூர் கண்மாயும் ஒன்று. சுமார் 620 ஏக்கரில் இக்கண்மாய் பரந்து விரிந்து கிடக்கிறது.  ஆனால்,  சுமார் 10 அடி ஆழத்திற்கு தற்போது புதர் மண்டிக் கிடக்கிறது. மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் மற்றும் பூ மார்க்கெட், நெல் வணிக வளாகம் ஆகியவைகள் இக்கண்மாய் பகுதியில்தான் இருக்கின்றன.

தண்ணீருக்கு வழியில்லை இது தவிர, வண்டியூர் கண்மாய் அருகில் லேக் ஏரியா, மேலமடை, கருப்பாயூரணி, பாண்டி கோயில், கோமதிபுரம், கே.கே.நகர், அன்புநகர், செய்தியாளர் நகர், ஐடி பூங்கா, வண்டியூர் என பெரிய குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் வசிப்போருக்கு, வண்டியூர் கண்மாயில் தண்ணீர் நிரம்பினால் ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் பஞ்சம் இருக்காது. தற்போது இக்கண்மாயில் புதர் மண்டிக் கிடப்பதால், தண்ணீர் தேங்க வழியில்லாமல் போய் விட்டது.

ஆழ்துளை கிணறு மூலம்
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு, இக்கண்மாயை  சுற்றியுள்ள பகுதிகளில் 10 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. பெரும்பாலான வீடுகளில் உறை கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தனர். ஆனால், இப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. இதனால் தற்போது உறை கிணறுகளில் தண்ணீர் கிடைத்த காலம் மாறி, ஆழ்துளை கிணறு போட வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். ஆழ்துளை கிணற்றில் சுமார் 100 அடியில் கிடைத்து வந்த தண்ணீர், இப்போது அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால் கண்மாயை தூர் வார வேண்டும் என இப்பகுதி மக்கள், அரசுக்கு தொடர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

வெளியேறும் நீர்...
கடந்த சில ஆண்டுகளாக பொதுநல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் முயற்சியில் சிறிய அளவில் தொகை ஒதுக்கி, குழிகள் தோண்டப்பட்டன. முழுமையாக தூர்வாரப்படவில்லை. கரையின் ஒருபுறத்தில் பலப்படுத்தினர். பாண்டி கோயில், கோமதிபுரம் பகுதிகளில் மட்டும் இந்த கரை பலப்படுத்தும் பணி நடந்தது. கருப்பாயூரணி அருகில் உள்ள மடை அப்படியே உள்ளது. இந்த மடை புதுப்பிக்கப்படவில்லை. பாழடைந்த நிலையில் உடைந்து நொறுங்கிக் கிடக்கிறது. இப்பகுதிகளிலும் கண்மாயில் தேங்கும் சிறிதளவு தண்ணீரும் வெளியேறிச் செல்லும் நிலையே இருக்கிறது.

நிலத்தடி நீர் பாதிப்பு
  இந்த கண்மாய் தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்தலாம் என்ற திட்டமும் இருந்தது. அந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இக்கண்மாயை ஆழப்படுத்தாததால் மழைக்காலங்களில் மடை வழியாக தண்ணீர் வெளியேறி யாருக்கும் பயன்படாமல் வைகை ஆற்றில் கலந்து விடுகிறது. தண்ணீர் தேங்காத நிலையில் மேலமடை, யாகப்பா நகர், தாசில்தார் நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது.

 கண்மாய் பராமரிப்பு செய்யவும், தூர் வாரவும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  முன்பு  சுற்றுலாத்தலமாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற அறிவிப்புகள் வெளியானது. ஆனால், இதற்கான முறையான அறிவிப்புகள், தகுந்த நிதி ஒதுக்கீடுகள் இல்லை. தூர் வாரப்படும், சுற்றுலா தலமாக்கப்படும் என்றெல்லாம் சொன்ன அறிவிப்புகள் எல்லாம் ஏட்டளவிலேயே கானல் நீராக மறைந்து விட்டது. அத்திட்டங்கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.

சுற்றுலாத்தலமாக்கலாமே... மதுரை நகருக்குள் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த பூக்காங்கள் பெரும்பாலும் இல்லாமல் இருக்கிறது. இந்த வண்டியூர் கண்மாய் கரையோரத்தில் பெரிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் நிறைந்த பூங்கா அமைக்க வழியிருந்தும், சுற்றுலாத்தலமாக்க வாய்ப்பிருந்தும், அது வழியில்லாமல் போய் விட்டது. நடையாளர் கழகம் உள்ளிட்ட தனியார் அமைப்பினரே இங்கு ஒரு ஓரத்தில் பூங்கா வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இதுவும் முழுமையான பயனை மக்களுக்குத் தரவில்லை.

 உலகத்தமிழ் மாநாடு கடந்த 1981ல் நடக்கும்போது அப்போதைய ஆட்சியில் வண்டியூர் படகு போக்குவரத்து திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகும் ஒவ்வொரு தடவையும் படகு போக்குவரத்து விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், வண்டியூர் கண்மாய் பராமரிக்கப்படாததால், புதர் மண்டி, தண்ணீர் தேங்க முடியாத நிலையில் இருப்பதால், படகு போக்குவரத்தும் கனவாகவே இருக்கிறது.



Tags : bush ,Madurai ,city , Occupancy, Madurai city, drinking water source, Vandiyur Kanmai
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை