×

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க பொங்கல் பரிசு கரும்புகள் வந்தது: நாளை முதல் வினியோகம்

வேலூர்: வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக வழங்க கரும்புகள் லாரிகளில் வந்தது. நாளை முதல் பொங்கல் பரிசு வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பொங்கல் பண்டிகையை சிறப்பாக மக்கள் கொண்டாடும் வகையில் பொதுவிநியோகத்திட்ட அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் ஒரு முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் 2,500 ரூபாய் ஆகியவற்றை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26ம் தேதி இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கியது. ரேஷன் ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை வழங்கும் பணி கடந்த 26ம் தேதி தொடங்கி, 30ம் தேதியுடன் நிறைவடைந்தது. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பு பேக்கிங் செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள 10 லட்சத்து 57 ஆயிரத்து 245 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ₹264 கோடியே 31 லட்சத்து 12 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் பொங்கல் பண்டிகையொட்டி தமிழக அரசு சார்பில் ₹2,500 மற்றும் முழுக்கரும்புகளுடன் கூடிய பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இதற்கிடையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை குடும்ப அட்டைகளுக்கு தேவையான கரும்புகள் வழங்குவதற்காக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து நேற்று லாரிகள் மூலம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கூட்டுறவு குடோனில் இருந்து அந்தந்த ரேஷன் கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.  பொங்கல் பரிசு தொகுப்பின் போது, முழு கரும்பாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு குளறுபடி இல்லாமல் வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : family card holders ,Vellore ,Ranipettai ,districts ,Tirupati , Vellore, Ranipettai, Tirupati, Pongal gift, sugarcane
× RELATED தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்...