×

குறைந்துகொண்டே வரும் விற்பனை 2019-20ல் அம்மா உணவகம் மூலம் 25 கோடி வருவாய்

* கடந்தஆண்ைட விட 3 கோடி குறைவு
* நிதி திரட்ட நிறுவனம் அமைக்க ஒப்புதல்

சென்னை: அம்மா உணவகம் மூலம் கடந்த நிதியாண்டில் 25.34 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது. முந்தைய நிதி ஆண்டை விட இது 3 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.  சென்னை மாநகராட்சியில் முதன்முதலாக 2013ம் ஆண்டு 207 அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டன. இங்கு காலை நேரங்களில் இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், மதியம் சாம்பார் சாதம், கலவை சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும், இரவில் 2 சப்பாத்தி 3 ரூபாய்க்கும் குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. இவ்வாறு குறைவான விலையில் சென்னையில் பலர் அம்மா உணவகங்களை நம்பி உள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல இடங்களில் உள்ள அம்மா உணவங்களில் முறையான பராமரிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் உணவின் தரமும் குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது. இதனைத் உறுதிப்படுத்தும் வகையில் சென்னையில் அம்மா உணவகம் மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019- 20ம் நிதியாண்டில் சென்னையில் உள்ள அம்மா உணவகம் மூலம் 25.34 கோடி வருமானம் கிடைத்துள்ளது. ஆனால் இதற்கு முந்தை நிதி ஆண்டில் 28.63 கோடி வருவாய் கிடைத்து இருந்தது. இதன்படி பார்த்தால் கடந்த நிதி ஆண்டில் அம்மா உணவகம் மூலம் கிடைத்த வருவாய் 3 கோடி குறைந்துள்ளது. இதேபோல் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக வருவாய் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நஷ்டத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்தை மேம்படுத்துவதற்கான நிதி திரட்ட நிறுவனம் ஒன்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இது தொடர்பான தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி அம்மா உணவக நிறுவனம் (Amma Unavagam Foundation) அமைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தை உருவாக்கி பதிவு செய்யும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இந்த நிறுவனம் அம்மா உணவகத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது, மேலாண்மை உள்ளிட்ட பணிகளை மேற்கொளும்.

ஆண்டு    வருவாய்          
2014-15    40.52 கோடி
2015-16    33.42 கோடி
2016-17    33.49 கோடி                   
2017-18    31.40 கோடி
2018-19    28.63 கோடி
2019-20    25.34 கோடி


Tags : Amma Restaurant , The declining sales will generate Rs 25 crore through Amma Restaurant in 2019-20
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...