×

ஒரு வீட்டுக்கு 9 இணைப்பு கொடுத்து மின்வாரிய அதிகாரி மெகா முறைகேடு: அமைச்சர் தொகுதியில் அவலம்

தண்டையார்பேட்டை: மின்வாரிய அலுவலகத்தில் புதிய மின் இணைப்பு பெற மாநகராட்சி வரி ரசீது, வீட்டுப்பத்திரம் ஆகியவை சமர்ப்பித்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும். அதுவும் 2 மாடியுள்ள வீடுகளுக்கு மட்டும்தான் இது பொருந்தும். ஆனால் 3 மற்றும் 4 மாடிகள் கொண்ட வீடுகளுக்கு இது பொருந்தாது. 3 மாடிகளுக்கு மேல் அடிஷனல் மின் இணைப்பு பெற மின்வாரிய விதிமுறைப்படி சிஎம்டிஏ அப்ரூவல் இருக்கவேண்டும். இப்படி இருக்கும் நிலையில் ராயபுரம் பஜனை கோயில் தெருவில் 4 மாடி கொண்ட ஒரு வீட்டுக்கு 9 புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் வெங்கடாசலம் நாயக்கன் தெருவில் 4 மாடி வீட்டுக்கு 9 இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் பல ஆண்டுகளாக ராயபுரம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்தவர். இவரை கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இடமாற்றம் செய்வதாக  மின்வாரியம் அறிவித்தது. இதை பயன்படுத்தி ஒவ்வொரு இணைப்புக்கும் எந்தவொரு ஆவணங்களும் பெறாமல் விதிமுறை மீறி ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக மின்இணைப்பு வழங்கியுள்ளார். தற்போது அவர் இடமாற்றம் செய்யப்பட்டு வேறு இடத்தில் பணி செய்து வருகிறார். அமைச்சர் ஜெயக்குமார் தொகுதியிலே மின்இணைப்பில் முறைகேடு நடந்துள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மின்வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் நிலையில் இதுபோன்ற அதிகாரிகளால் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. உரிய ஆவணங்களை கொடுத்தாலும் மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்படுத்துகின்றனர். ஆனால், பணம் கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தால் கண்டுகொள்வதில்ைல. புகார் வரட்டும் பார்ப்போம் என அலட்சியமாக கூறுகிறார்களே தவிர தவறு நடக்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்வதில்லை. முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும்.

இதை இப்படியே விட்டுவிட்டால் தொடர்ந்து மின்சார வாரியத்தில் பல்வேறு முறைகேடு நடைபெற வழிவகுக்கும். விஜிலென்ஸ் அதிகாரிகள் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினால் பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யலாம் என்பது சமூக ஆர்வலர்கள், பொதுமக்களின் கோரிக்கையாகும். மின்சார வாரியத்தில் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கிறது என்பதால் இந்த ஆட்சி மீது மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது. 


Tags : house ,constituency , Electricity official mega abuse by giving 9 connections to a house: Disgrace in the ministerial constituency
× RELATED இந்த ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கிறதா?