×

நரசாபுரா ஐபோன் நிறுவனத்தில் போராட்டம்: தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை: அமைச்சர் சிவராம் ஹெப்பார் தகவல்

பெங்களூரு: தொழிலாளர் நலன் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவராம் ஹெப்பார் கூறினார்.  கோலார் மாவட்டம் நரசாபுராவில்  தனியார் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. ஐபோன் உள்ளிட்ட விலை உயர்ந்த செல்போன் உதிரிபாகங்கள் இதில் தயாரிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. 20ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்த அந்நிறுவனம் ஊழியர்களுக்கு 8ஆயிரம், 7 ஆயிரம் என வழங்கியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். இது கலவரமாக மாறிய நிலையில் அதில் பணியாற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதிர்க்கட்சி தலைவரும்  மாஜி முதல்வருமான சித்தராமையா உள்ளிட்டோர் இந்த பிரச்னையில்  தலையிட்ட நிலையில் அரசு  விரைவாக நடவடிக்கை எடுத்தது.

இது  போன்ற சூழ்நிலையில் மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவராம் ஹெப்பார் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஹெப்பார் கூறியதாவது, மாநிலத்தில் தொழில் முதலீடு கிடைக்கவேண்டும் என்பதற்காக முதல்வர் எடியூரப்பா பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். பு திய தொழிற்சாலை அமையும் போது  அதிக அளவில் வேலைவாய்ப்பும் நமது தொழிலாளர்களுக்கு கிடைக்கும். நரசாபுரா சம்பவத்தில் தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் தொழிலாளர்கள் இடையே மறுபடியும் சுமூக உறவு ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். போராட்டத்தின் போது கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் தவிர மற்ற தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க செய்யப்படும். அத்துடன் இது போல் மறுபடியும்  நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் நிறுவனம் முழு அளவில் செயல்படும். இது தொடர்பாக விதான சவுதாவில் சம்பந்தப்பட்ட நபர்களை அழைத்து  விரிவாக பேச்சுவர்த்தை நடத்துவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சிவராம் ஹெப்பார்  கூறினார்.


Tags : Minister , Narasapura iPhone strike: Action not to harm workers' welfare: Minister Sivaram Heppar
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...