சசிகலா காலில் ஊர்ந்து வந்து முதல்வரானவர் எடப்பாடி... மாமன், மச்சானுக்கு டெண்டர் அளிக்கும் குடும்ப ஊழல் கட்சி அதிமுக : மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு!!

மரக்காணம் :மரக்காணத்தில் இன்று தடையை மீறி நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, மாமன், மச்சானுக்கு டெண்டர் அளிக்கும் குடும்ப ஊழல் கட்சி அதிமுக என ஆவேசமாக பேசினார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சி 12வது வார்டு செல்லியம்மன் கோயில் தெருவில் இன்று மரக்காணம் நகர திமுக சார்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, விவசாயிகள், உப்பள தொழிலாளர்கள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள காலை 8 மணி முதலே ஏராளமான பெண்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

இதற்கிடையே மரக்காணத்தில் கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் கிராம சபை கூட்டம் நடத்தப்படும். மற்ற நாட்களில் நடத்த அனுமதியில்லை எனவும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பாணையை மாவட்ட செயலாளர் ெசஞ்சி மஸ்தானிடம் மரக்காணம் போலீசார் வழங்கினர்.இருப்பினும் பெண்கள் அணி அணியாக திரண்டு வந்தனர். இதனால் எதிர்ப்பார்த்த கூட்டத்தை விட பன்மடங்கு கூட்டம் கூடியது. கூட்டம் நடைபெற்ற திடலில் இடம் இல்லாத சூழல் ஏற்பட்டது. கோட்டக்குப்பம் டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் திட்டமிட்டபடி மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவருக்கு பூக்களை தூவியும், பூரண கும்ப மரியாதை அளித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து அங்கு திரண்டிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்களிடம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். பின்னர் ஆலமரத்தின் கீழ் மக்கள் கிராம சபை கூட்டத்தை துவக்கி வைத்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்த மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த கூடாது என பல்வேறு வகையில் தடையை ஏற்படுத்தினார்கள். இங்கு கூடும் கூட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி தூக்கத்தை தொலைத்ததோடு பயந்து போய் இருக்கிறார். அதனால் எப்படியாவது தடை செய்ய வேண்டும் என முயற்சித்தனர்.

கிராம சபை கூட்டத்தை கலெக்டர் நடத்த வேண்டும். ஆனால், மக்கள் சபை கூட்டத்தை நான் கலெக்டராக இருந்து நடத்துகிறேன். இந்த பெயர் மாற்றம் கூட பயந்துகொண்டு மாற்றவில்லை. கிராம சபை கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்பதே நமது நோக்கம். இன்றைக்கு முதல்வராக இருக்கிற எடப்பாடி பழனிச்சாமி ஒரு விபத்தால் முதல்வர் ஆனவர். அவர் சசிகலா காலில் ஊர்ந்து வந்து முதல்வரானார்.

இன்னும் தேர்தலுக்கு 4 மாதங்கள் தான் இருக்கிறது. இந்த ஆட்சிக்கு மக்கள் முடிவு கட்ட வேண்டும். திமுக மீது நீங்கள் பெரும் நம்பிக்கையை வைத்திருப்பது இங்கு கூடியிருப்பதன் மூலம் தெரிகிறது. உங்கள் நம்பிக்கை வீண்போகாது. இங்கு ஆயிரக்கணக்கில் பெண்கள் திரண்டிருக்கிறீர்கள் என்றால், ஒரே ஒரு விஷயம் தான். இந்த ஆட்சியை தூக்கி வீச வந்திருக்கிறீர்கள்.

கடந்த 23ம் தேதி காஞ்சிபுரத்தில் கிராம சபை கூட்டத்தை கூட்டினோம். அதன் பிறகு இணையவழி, செல்போன் ஆகியவற்றின் மூலமாக 1 நாளில் மட்டும் 18 லட்சத்து 20 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். இன்று கூட 23 ஆயிரம் பேர் இணைந்திருக்கிறார்கள். நம்முடைய இந்த கிராம சபை கூட்டங்களை இணைய வழி மூலம் 2 கோடியே 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

வாரிசு அரசியல் செய்வதாக கூறுகிறார்கள். 13 வயதில் மாணவனாக இருந்தபோதே இயக்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறேன். நேரடியாக வந்துவிடவில்லை. படிப்படியாக தான் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். எடப்பாடி பழனிச்சாமி மாமன், மச்சானுக்கு டெண்டர் விட்டு ஊழல் குடும்ப கட்சியாக அதிமுக இருக்கிறது. கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன்களை செய்யும் அதிமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் முடிவு கட்ட வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக தொடர்ந்து மக்களுக்காக பயணிக்கிறது. 10 ஆண்டு காலம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் மக்களுக்காக களத்தில் நின்றோம். ஓடி ஒளிந்துவிடவில்லை. துறவறம் செல்லவில்லை. திமுக என்றைக்கும் மக்களுக்கான இயக்கமாக பணியாற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அதிமுகவை ஏன் நிராகரிக்கிறோம் என்று கூறி அதற்கான காரணங்களை விளக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் பொன்முடி, மாவட்ட செயலாளர்கள் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ, புகழேந்தி, எம்எல்ஏக்கள் சீத்தாபதி சொக்கலிங்கம், மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>