×

கரும்பு தோட்டம் அமைத்து அசத்திய குமரி விவசாயி

நாகர்கோவில்: பொங்கல் என்றாலே தித்திக்கும் கரும்புதான் நினைவுக்கு வரும். ஆண்டுதோறும் தைத்திருநாளில் புதிதாக அறுவடை ெசய்த நெல்லை புத்தரிசியாக்கி சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றி கடன் செலுத்துவது வழக்கம். அப்போது மஞ்சள், கரும்பு வைத்து வழிபடுவார்கள். இதற்காக ஒவ்வொரு அண்டும் தை திருநாளுக்கு மக்களுக்கு கிடைக்கும் வகையில் மஞ்சள், கரும்பு உள்ளிட்ட பயிர்களை 11 மாதங்களுக்கு முன்பே விவசாயிகள் பயிரிட தொடங்குவார்கள். குறிப்பாக சிவகங்கை, திருச்சி, கரூர், மதுரை, சேலம், தஞ்சை, திருவாரூர், நாகை, வேலூர், கடலூர் உள்பட வட மாவட்டங்களில் அதிக அளவு கரும்பு சாகுபடி நடப்பது வழக்கம்.

தென் மாவட்டங்களில் நெல், வாழையை மையப்படுத்தி சாகுபடி நடந்து வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த முருகன் என்ற விவசாயி ஊட்டுவாழ்மடம் பகுதி சபையார் குளத்தில் இருந்து பாசன வசதி பெரும் சபையார் பத்து பகுதியில் சுமார் ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடைக்கு தயராக உள்ளது. இது குறித்து விவசாயி முருகனிடம் கேட்டபோது: நெல், வாழைக்கு மாற்று பயிராக கரும்பு சாகுபடி செய்துள்ளேன். கரும்பு 1 வருடகால பயிர் ஆகும். வட மாவட்டங்களில் கரும்பு சாகுபடி நடந்து வருகிறது. தற்போது இங்கு பயிரிடப்பட்டுள்ள கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது.

வெளி மாவட்டங்களில் இருந்து கரும்புகளை கொள்முதல் செய்து வரும் வியாபாரிகள் தற்போது இங்கு வந்து விலைக்கு கேட்டு வருகின்றனர் என்றார். கரும்புக்கு தண்ணீர் தேங்கி நிற்ககூடாது. ஆனால் தினமும், அல்லது இரு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் விடவேண்டும். குமரி மாவட்டத்தில் இருபருவ மழை பெய்து வருகிறது. தண்ணீர் தேங்காமல் கரும்பு சாகுபடி செய்து அறுவடைக்கு தயாராக்கிய விவசாயி முருகனை மற்ற விவசாயிகள் பாராட்டி வருகின்றனர்.

Tags : Asathiya Kumari ,sugarcane plantation , Asathiya Kumari farmer set up a sugarcane plantation
× RELATED தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் 2...