×

இவர் 70s பெண் போட்டோகிராபர்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஒரு பெண்ணுக்கு வளைகாப்பு விழா. மொத்த கூட்டமும் போட்டோகிராபருக்காக காத்திருக்கிறது. சற்று நேரத்தில் வயதான பெண் ஒருவர் வருகிறார். தன் கைப்பையில் இருந்து கேமராவை எடுத்து விறுவிறுவென புகைப்படங்களை எடுக்கத் தொடங்குகிறார்.விழாவுக்கு வந்த வெளியூர் ஆட்கள் வியப்புடன் இக்காட்சியைப் பார்க்கின்றனர். ஆனால், உள்ளூர் ஆட்கள் அதை இயல்பாக ஏற்கின்றனர். ஏனெனில் பல்லடம் பகுதியில் நடக்கும் அனைத்து வீட்டு விசேஷங்களுக்கும் பல வருடங்களாக புகைப்படம் எடுப்பவர் இந்த வயதான பெண்தான். பெண்கள் எல்லாத் துறைகளிலும் வந்துவிட்டார்கள். காடு கரைகளில் அலைந்து பயணிக்கும் சூழலியல் புகைப்படக் கலைஞராகக் கூட பெண்கள் இப்போது சாதித்து வருகின்றனர்.

ஆனால் -எழுபதுகளில் பெண்கள் போட்டோகிராஃபராக இருப்பது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. அந்தக் காலம் முதல், ஃபிலிம் ரோலில் புகைப்படம் எடுப்பது முதல், இன்று டிஜிட்டலில் போட்டோ எடுப்பது வரை தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்து வருகிறார் பல்லடம் போட்டோகிராஃபர் தனலட்சுமி அம்மாள்.திருப்பூர், திண்டுக்கல், கோவைப் பகுதியில் தனலட்சுமி அம்மாள் என்றால் அத்தனை பிரபலம். திருமணம், காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா, அரசியல் பொதுக்கூட்டம் மற்றும் பல சுப நிகழ்ச்சிகள் என எல்லா முக்கிய நிகழ்வுகளுக்கும் தனலட்சுமி அம்மாள் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகின்றனர். அந்தளவுக்கு ராசியானவர் இவர்!

‘நீங்கள்தான் புகைப்படம் எடுக்க வேண்டும்’ என்று சொன்னால் போதும். கேமரா, லைட், ட்ரைப்பேட், லென்ஸுடன் ஆஜராகி விடுகிறார் தனலட்சுமி அம்மாள். 40  ஆண்டுகளாக புகைப்படக் கலைக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்டு இவர் இயங்கி வருகிறார்.“பூர்வீகம் மதுரை பக்கம் வாடிப்பட்டி. வீட்ல நாங்க ஆறு பெண்கள். குடும்பச் சூழல் காரணமா சின்ன வயசுலயே திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனி ஒண்ணுல வேலைக்கு சேர்ந்தேன்...’’ புன்னகையுடன் பேசத் தொடங்குகிறார் தனலட்சுமி அம்மாள். ‘‘நான் வேலை செய்த கம்பெனிக்கு பக்கத்துலயே போட்டோ ஸ்டூடியோ ஒண்ணு இருந்துச்சு. ‘ஸ்டூடியோவுல வேலை செய்ய சின்னப் பையன் இருந்தா சொல்லுங்க’னு எங்க கம்பெனி ஊழியர் ஒருத்தர்கிட்ட அந்த ஸ்டூடியோகாரங்க தகவல் சொல்லி இருந்தாங்க.  

இதைக் கேள்விப்பட்ட நான், மறுநாள் ‘அந்த வேலைய எனக்குத் தாங்க’னு போய் நின்னேன்! அப்ப எனக்கு 13 வயசுதான் இருக்கும். ‘ஸ்டூடியோ அசிஸ்டென்ட் வேலைக்கு ஆம்பளைப் பசங்களைத்தான் இதுவரை எடுத்திருக்கேன். உன்னால செய்ய முடியுமா..? இது கலையும் தொழில்நுட்பமும் சார்ந்த துறை’னு அங்க இருந்த ஸ்டூடியோ முதலாளி தேவராஜ் சொன்னார்.‘முடியும்’னு அழுத்தமா நம்பிக்கையோட சொன்னேன். ‘சரி. வேலை செய்’னு சிரிச்சுக்கிட்டே அனுமதிச்சார். இப்ப நினைச்சுப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. அந்தக் காலத்துல அதுவும் திருப்பூர் மாதிரியான ஊர்ல பெண் பிள்ளையை ஸ்டூடியோ அசிஸ்டெண்ட்டா சேர்த்துக்கறது பெரிய விஷயம். அந்தப் பெரிய விஷயத்தை ரொம்ப இயல்பா செய்தார் தேவராஜ் சார். கம்யூனிச சிந்தனைகளில் அவருக்கு ஈடுபாடு அதிகம். முற்போக்கா சிந்திக்கக் கூடியவர். அதனாலதான் இது சாத்தியமாச்சு. குருவுக்கு குருவா இருந்து புகைப்படக் கலையை எனக்கு கோபப்படாம தேவராஜ் சார் கத்துக் கொடுத்தார். பத்து வருஷங்கள் அவர்கிட்ட தொழில் கத்துக்கிட்டேன்...’’ நெகிழ்ச்சியுடன் சொல்லும் தனலட்சுமி அம்மாள், ஃபிலிம் ரோலில் புகைப்படங்கள் எடுப்பது கடினம் என்கிறார்.

‘‘இப்ப டிஜிட்டல்ல போட்டோ எடுக்கறோம். சரியா இல்லைனா உடனே அதை டெலீட் செய்துடலாம். ஆனால், ஃபிலிம் ரோல் அப்படியில்ல. ஒரு ரோல்ல 34 போட்டோஸ்தான் எடுக்க முடியும். ஒவ்வொரு க்ளிக்கும் கவனமா பண்ணணும். எடுத்ததை உடனே டிஜிட்டல் மாதிரி பார்க்க முடியாது. பெரிய பிராசஸ் அது. தப்பா எடுத்திருக்கோமா இல்லையானு அப்பவே தெரியாது. கழுவிப் பார்த்துதான் தெரிஞ்சுக்க முடியும். இதுக்கு குறைஞ்சது ரெண்டு நாட்களாவது ஆகும். அதுக்குள்ள விழாவே முடிஞ்சிருக்கும்! அதனால வேஸ்ட் பண்ணவே கூடாது!

ஃபிலிம் ரோலை டார்க் ரூம்லதான் டெவலப் பண்ணுவாங்க. கெமிக்கல் பிராசஸிங் செய்யணும். இப்படி நான் போட்டோ எடுக்க கத்துக்க ஆரம்பிச்சப்ப கேமரா ஒர்க் பெரிய டாஸ்க்கா இருந்தது.இதை எல்லாம் மனசுல வைச்சு தொழிலைக் கத்துக்கிட்டேன். நான் தேறினதும், ‘தனியா போட்டோ ஸ்டூடியோ வை’னு தேவராஜ் சாரே சொல்லி வங்கி கடனுக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுத்தார். அவருக்கு வந்த திருமண ஆர்டர்கள்ல அவரால முடியாததை எனக்கு திருப்பி விட்டார். இப்படி பலவகைகள்ல அவர் எனக்கு உதவி செஞ்சாரு...’’ என்ற தனலட்சுமி ஆரம்பத்தில் பலரது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி இருக்கிறார்.

‘‘எல்லா நிகழ்ச்சிகளுக்கும் நான் போட்டோ எடுப்பேன். ஆரம்பத்துல என்னை யாருமே மதிக்க மாட்டாங்க. கேமராவை நான் கைல எடுத்தாலே வாயைப் பொத்திக்கிட்டு சிரிச்சு கிண்டல் பண்ணுவாங்க. ஈரோடு பக்கம் ஒரு கிராமத்துல நடந்த திருமணத்துக்கு போட்டோ எடுக்கப் போயிருந்தேன். அந்த வீட்ல இருந்த வயசான பெரியவர், ‘பொம்பளைங்கலாம் இந்த வேலைக்கு வந்தா உருப்படுமா’னு கத்தி ரொம்பவே
அசிங்கப்படுத்தினார்.

கல்யாணப் பையன் மணமேடைல இருந்து எழுந்து வந்து அந்த தாத்தாவை சமாதானப்படுத்தியும் அவரால ஜீரணிக்கவே முடியலை. ‘நீ எப்படி பொம்பளையைக் கூட்டிட்டு வரலாம்’னு மணமகனையும் திட்ட ஆரம்பிச்சிட்டார். எந்த சமாதானத்தையும் அவர் ஏத்துக்கலை. நான் போட்டோவே எடுக்கக் கூடாதுனு பிடிவாதமா இருந்தார். அழுதுகிட்டே நான் திரும்பினேன்...’’ நினைவுகளில் மூழ்கும் தனலட்சுமி அம்மாள், மக்கள் போராட்டங்களையும் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

‘‘25 வருஷங்களுக்கு முன்னாடி ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை போலீஸ்காரங்க அகற்றிட்டு இருந்தாங்க. அதை போட்டோ எடுக்கப் போனேன். சரியான கோணம் கிடைக்கலை. மக்கள் கூட்டமா நின்னு தடுத்தாங்க. உடனே கொஞ்சமும் யோசிக்காம அங்க நின்னுட்டு இருந்த ஜேசிபி வாகனத்து மேல ஏறி நின்னு சாலை ஆக்கிரமிப்பை படம் எடுத்தேன்! மக்கள் எல்லாரும் ஆச்சர்யமா என்னைப் பார்த்தாங்க. ஊர் முழுக்க இதைப்பத்தியே பல நாட்கள் பேசினாங்க... இப்பவும் கிராமத்துப் பெரியவங்க பலர் இதை வியப்போடு பேசறாங்க...’’ கண்சிமிட்டும் தனலட்சுமி அம்மாள், ராசியான போட்டோகிராஃபர் எனப் பெயர் எடுத்திருக்கிறார்.
‘‘வரன் பார்க்க போட்டோ எடுத்துத் தரச் சொல்லுவாங்க. நானும் எடுத்துக் கொடுப்பேன். சில மாதங்கள்லயே கல்யாணப் பத்திரிகை கொடுத்து, ‘மேரேஜையும் நீங்களே போட்டோ எடுத்துக் கொடுங்க’னு சொல்லுவாங்க. நானும் எடுத்துக் கொடுப்பேன். ஒரு வருஷத்துல ‘குழந்தைக்கு பெயர் சூட்டறோம்... போட்டோ எடுத்துக்
கொடுங்க’னு கேட்பாங்க!

இந்தளவுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ ராசியானவனு பெயர் வாங்கி இருக்கேன்! ஒரே நாள்ல ஏழு எட்டு கல்யாண அழைப்பு எல்லாம் வரும்; வருது! இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்யாணங்களை போட்டோ எடுத்திருக்கேன்... தாலி கட்டற நொடியை காலம் முழுக்க பார்க்கறா மாதிரி ஃபிலிம் ரோல்ல இருந்து இப்ப டிஜிட்டல் வரை பதிவு செய்துட்டு இருக்கேன்.நான் போட்டோ எடுத்த எல்லா ஜோடிகளும் இப்ப குழந்தைகளோடு மகிழ்ச்சியா வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்க குழந்தையோட கல்யாணத்துக்குக் கூட நானே போட்டோகிராஃபரா இருக்கேன்! இதைவிட வேற என்ன வேணும் சொல்லுங்க..?’’ மகிழ்ச்சியும் பெருமையுமாகக் கேட்கும் தனலட்சுமி அம்மாளுக்கு இன்னும் திருமணமாகவில்லை. ‘‘அப்ப என்னை எல்லாரும் அபசகுனமா பார்த்தாங்க. என்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைங்க எல்லாம் ‘வேண்டாம்’னு மறுத்துட்டாங்க. ஒரு கட்டத்துக்கு அப்புறம் எனக்கு கல்யாண ஆசை போயிடுச்சு. இப்ப மத்தவங்க கல்யாணத்தை மன நிறைவோடு அவங்க பல்லாண்டு வாழணும்னு வேண்டிக்கிட்டு போட்டோ எடுத்துட்டு இருக்கேன்!’’ என சொல்கிறார் தனலட்சுமி அம்மாள்.

Tags : photographer , Female, photographer
× RELATED திருவட்டாரில் பரபரப்பு ஆற்றில் மூழ்கி போட்டோ கிராபர் பலி