×

சென்னை மாநகராட்சி திடீர் அறிவிப்பு ஜன.1 முதல் குப்பை கொட்ட கட்டணம்

சென்னை: சென்னையில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் குப்பை கொட்ட கட்டணம் வசூலிக்கப்போவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதன்படி வீடுகளுக்கு மாதம் ரூ.10 முதல் ரூ.100 வரை வசூலிக்கப்படும். சென்னையில் தினசரி 5 ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 15 மண்டலங்களில் 7 மண்டலங்கள் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 4 மண்டலங்களை தனியாருக்கு அளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.


இவ்வாறு பல்வேறு பணிகள் நடைபெற்றாலும் சென்னையில் குப்பை மேலாண்மை முறையாக செய்யப்படவில்லை என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு கடந்த 2020 ஜனவரி மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. கொரோனா

காரணமாக செயல்படுத்த முடியாத நிலையில் வரும் 2021 ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதில், குப்பை கொட்டுபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கவும், விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திடக்கழிவு மேலாண்மை விதிகள் கடுமையாக அமல்படுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, குப்பை கொட்டுவதற்கு வீடுகளுக்கு ஒரு மாதத்திற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.5 ஆயிரம் வரையும், நட்சத்திர விடுதிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.3 ஆயிரம் வரையும், தியேட்டர்களுக்கு ரூ.750 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், அரசு அலுவலகங்களுக்கு ரூ.300 முதல் ரூ.3000 வரையிலும், தொழில் உரிமம் பெற்ற பல்வேறு கடைகள் ரூ.500 முதல் ரூ.1000 வரையிலும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பொது இடங்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையிலும், மருத்துவமனை மற்றும் நர்சிங் ேஹாம்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும், தனியார் பள்ளிகளுக்கு ரூ.500 முதல் ரூ.3000 ஆயிரம் வரையிலும் குப்பை கொட்டுவதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி குப்பையை பொது இடத்தில் கொட்டுபவர்களுக்கு ரூ.500, தரம் பிரித்து வழங்காதவர்களுக்கு ரூ.500 முதல் ரூ.5000, கட்டுமான கழிவுகளை பொது இடத்தில் கொட்டினால் ரூ.2000 முதல் ரூ.5000, குப்பை எரித்தால் ரூ.500 முதல் ரூ.2000 அபராம் விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags : Chennai Corporation , Chennai Corporation Sudden Notice Jan. 1 First Garbage Dump
× RELATED கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னையில் 188 இடங்களில் தண்ணீர் பந்தல்..!!