×

விவசாயிகளின் கனவுகளை நனவாக்கும் ‘வெள்ளை தங்கம்’: தொடர் மழையால் பருத்தி மகசூல் கடும் பாதிப்பு

ஆத்தூர்: சேலம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட தாலுகாக்களில் பெரும்பாலான சிறு மற்றும் குறு விவசாயிகள், பாக்கு, நெல், மஞ்சள், கரும்பு, புகையிலை என பலவகை பணப்பயிர்களையும் சாமை, தினை, வரகு, சோளம், உளுந்து, எள், ஆமணக்கு உள்ளிட்ட தானிய பயிர்களையும் செய்து வந்தனர். கடந்த 1970ம் ஆண்டுகளில், தமிழகத்தில் ஏற்பட்ட கடும் வறட்சியினால், இந்த பகுதி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 1980ம் ஆண்டு கால கட்டங்களில், மழை பெய்யாததால் ஏற்பட்ட வறட்சியால் நிலை குலைந்து போன விவசாயிகள், இருக்கின்ற தண்ணீரை கொண்டு பயிர் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அப்போது தான், அவர்களின் கனவுகளை நனவாக்கும் பணப்பயிரான பருத்தி பயிரிடப்பட்டது.

ஆரம்ப காலங்களில் வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட ரக பருத்தியை பயிரிட்டு, நல்ல வருவாய் பெற்றனர். இதை தொடர்ந்து, மெல்ல மெல்ல வீரிய ஒட்டுரக பருத்தி பயிர்களை நாடி, அதன் மூலம் தமிழகத்தின் மான்ஸ்செஸ்டர் என்கிற பட்டத்தை, கோவையிடமிருந்து சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதி விவசாயிகள் பெற்றனர். இதனை தொடர்ந்து, சேலம் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கு அதிக லாபம் பெற்று தந்த பருத்தியை, வெள்ளை தங்கம் என்கிற அடைமொழி வழங்கி பெருமை கொள்ள துவங்கினார்கள் சேலம் கிழக்கு பகுதி விவசாயிகள். வெள்ளை தங்கம் என போற்றப்பட்ட பருத்தி, தற்போதைய தொடர் மழையால் மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி அனைத்தும், தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுநாள் வரை தமிழக வேளாண் துறையினரோ, வருவாய்த்துறையினரோ பாதிக்கப்பட்ட பருத்தி விவசாயிகள் குறித்து எந்தவித கணக்கெடுப்பும் எடுக்காமல் உள்ளனர் என வேதனையுடன் விவசாயிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, கடந்த காலங்களில் குறைவான தண்ணீரை கொண்டும், மானாவரியாகவும் விளையும் பருத்தியை சாகுபடி செய்து வந்தனர். கரும்புக்கு அடுத்தபடியாக பெரும் லாபத்தை தரக்கூடிய பயிரான பருத்தி விளைச்சல் அமோகமாக இருந்ததால், பல சிறு,குறு விவசாயிகள் தங்களின் குழந்தைகளுக்கு உயர்தரமான கல்வியை அளிக்கவும், விமரிசையாக திருமணம் செய்து வைக்கவும், நவீன வசதிகளுடன் மாடி வீடுகள் என வளமான வாழ்க்கை முறைக்கு மாற்ற உதவியது பருத்தி விவசாயம் தான். இந்நிலையில், தற்போது பெய்து வரும் தொடர் மழை, விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.

Tags : Cotton
× RELATED தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு