×

9 மாதங்களுக்கு பிறகு திருச்செந்தூருக்கு பாதயாத்திரை வரும் பக்தர்கள்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் பாதயாத்திரையாக வரத்தொடங்கியுள்ளனர்.அறுபடை வீடுகளில் 2வது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும். ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூருக்கு  உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர். கந்த சஷ்டி, பொங்கல், மாசி திருவிழா காலங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் கொரோனா பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால் கோயிலில் ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றது. இதுபோல் கடற்கரைக்கு செல்லவும், பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்ததையடுத்து கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் டிச.18ம்தேதி முதல் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கடலில் நீராட அனுமதிக்கப்பட்டனர். இதனால் காலை, மாலையில் கடற்கரையில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இதைத்தொடர்ந்து 9 மாதங்களுக்கு பிறகு நெல்லை, பாபநாசம், வி.கே.புரம், பாவூர்சத்திரம், தூத்துக்குடி, விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் முருக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வரத் தொடங்கியுள்ளனர்.


Tags : Devotees ,pilgrimage ,Thiruchendur , After 9 months Devotees on a pilgrimage to Thiruchendur
× RELATED திருச்செந்தூரில் 2வது நாளாக அலைமோதும்...