×

முதல்வர் வேட்பாளர் விவகாரம் அதிமுக- பாஜ மோதல் முற்றுகிறது: எல்.முருகனுக்கு அமைச்சர்கள் பதிலடி

சென்னை: தமிழக முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் மீண்டும் அதிமுக- பாஜ இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. முதல்வர் வேட்பாளரை பாஜ தலைமை தான் முடிவு செய்யும் என்று அந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் நேற்று முன்தினம் கூறிய கருத்துக்கு அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். எடப்பாடியை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம் என்று அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. ேதர்தலுக்கு இன்னும் 4 மாதமே இருப்பதால், தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், அதிமுக-பாஜ இடையே மோதல் போக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த அக்டோபரில் அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போர்க்கொடி தூக்கினார். இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அக்.7ல் இந்த பிரச்னை ஓய்ந்து, அன்றைய தினம் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். ஆனால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க பாஜ மறுத்தது.

அந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் இதுபற்றி கூறுகையில், முதல்வர் வேட்பாளரை பாஜ தலைமை தான் முடிவு செய்யும் என்று வெளிப்படையாகவே கூறினார். இது அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனிடையே இன்னொரு பிரச்னையும் இந்த இரு கட்சிகளிடையே இன்னும் நீடித்து வருகிறது. தமிழகத்தில் இந்த முறை எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று நினைக்கும் பாஜ, அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது. 60 தொகுதிகளை கேட்டு அந்த கட்சி நெருக்கடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் முதல்வர் வேட்பாளரை பாஜ தான் முடிவு செய்யும் என்று எல்.முருகன் கூறிய கருத்துக்கு 2 நாட்களுக்கு முன் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அதிமுக கூட்டணியில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது புதிதாக பாஜ மாநில தலைவர் பொறுப்புக்கு வந்தவருக்கும்(முருகன்) தெரியுமோ, தெரியாதோ தெரியவில்லை. ஆனால் அவர்களின் தேசிய தலைவருக்கு தெரியும் என்று பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில், அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த பாஜ மாநில தலைவர் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் தற்போதுள்ள கூட்டணியே தொடரும். ஆனால் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது, யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாஜ  தலைமைதான் முடிவு ெசய்யும் என்று மீண்டும் திரியை கொளுத்தி போட்டுள்ளார். முருகனின் கருத்துக்கு உடனடியாக அமைச்சர்கள் சிலர் பதிலடி கொடுத்துள்ளனர்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறும்போது, ‘‘தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்லலாம். அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை நாங்கள் முடிவு செய்து எடப்பாடி பழனிசாமியை அறிவித்து விட்டோம்.

அந்த நிலைப்பாட்டில் முதல்வர் வேட்பாளருடன் தேர்தலை சந்திப்போம். மற்றவர்கள் சொல்வதை பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை என்று ஆவேசமாக கூறினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பேட்டி அளித்த அமைச்சர் உதயகுமார், ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதுதான் எங்களின் நிலைப்பாடு. அதில் நாங்கள் தெளிவாக, உறுதியாக இருக்கிறோம் என்றார். மதுரையில் பேட்டி அளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்கும் கட்சியுடன் தான் கூட்டணி வைப்போம்.

அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் பாஜ தலைவர் முருகன் நேரில் சந்தித்து வாழ்த்து சொன்னார். இப்போது ஏன் அப்படி பேசுகிறார் என தெரியவில்லை என்றார். இதற்கிடையே நேற்று தஞ்சையில் நேற்று பேட்டியளித்த எல்.முருகன், முதல்வர் வேட்பாளரை எங்கள் கட்சித் தலைமைதான் அறிவிக்கும் என்று மீண்டும் உறுதிபட தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எல்.முருகன் மற்றும் அமைச்சர்களின் வெளிப்படையான கருத்துக்களால் அதிமுக கூட்டணியில் மோதல் முற்றியுள்ளது. இதன்மூலம் கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.

Tags : AIADMK ,clash ,candidate ,BJP ,CM ,Ministers ,Murugan , Chief Ministerial candidate issue AIADMK-BJP clash ends: Ministers retaliate against L. Murugan
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...