×

கொரோனா காலத்திலும் அதிக நேரடி முதலீடு இந்திய பொருளாதாரத்தின் மீது உலக நாடுகள் பெரும் நம்பிக்கை: அசோசெம் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: இந்திய பொருளாதாரத்தின் மீது உலக நாடுகள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதை, அந்நிய நேரடி முதலீடுகள் பிரதிபலிக்கின்றன, என்று அசோசெம் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்பின் (அசோசெம்) நூற்றாண்டு விழா கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் இந்த நூற்றாண்டின் சிறந்த நிறுவனத்திற்கான விருதை டாடா நிறுவனத்தின் சார்பில் ரத்தன் டாடா பெற்று கொண்டார். இந்த மாநாட்டில் நேற்று காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, விருதை வழங்கி  பேசியதாவது: கொரோனா தொற்று காலத்தில் உலக நாடுகள் பல சிக்கல்களை சந்தித்த போதும் கூட, நாட்டின் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதுவரை இல்லாத அளவு அந்நிய நேரடி முதலீட்டை இந்தியா பெற்றுள்ளது. உலக நாடுகள் இந்திய பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளன. இதனை தக்க வைத்து கொள்ள உள்நாட்டு முதலீட்டை பெருக்க வேண்டும். விவசாயம், பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கட்டுமானம், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறைகளுக்கான முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.

இந்திய இளைஞர்கள் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் மூலம் உற்பத்தி துறையில் சாதனை படைத்துள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் முதல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30ல் இருந்து 22% ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய தயாரிப்பு நிறுவனங்களுக்கான வரியும் 25ல் இருந்து 15 சதவீதமாக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில், மருத்துவ துறையில் இந்தியா முக்கிய பங்காற்றி உள்ளது. விவசாயம் முதல் மருத்துவம் வரை உலக நாடுகளுக்கு இந்தியா உதவி உள்ளது.உலகம் மற்றொரு தொழிற்புரட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனவே, இன்று முதல் திட்டமிட்டு செயல்பட்டால் நாட்டை கட்டி எழுப்பும் நமது இலக்கை அடைய முடியும். உங்களிடம் உள்ள அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி, தற்சார்பு இந்தியாவை உருவாக்க முனைப்புடன் செயல்படுங்கள். குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த இலக்கினை அடைய வேண்டும். தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கி தருவதுடன் அதற்கு உதவியும், ஊக்கமும் அளித்து, தேவையான கொள்கை மாற்றங்களை அரசு கொண்டு வருகிறது. தொழில்துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்புகளை வெற்றிகளாக மாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

ஏன் இந்தியாவில் கூடாது?
மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, கூடுதல் வரி  விதிப்பு தொடர்பான சிக்கல்களை தீர்க்கவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம்  கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் ஏற்பட்டுள்ளன. முதலீடுகளில் அரசின் தலையீடு அதிகமாக இருந்ததால் முன்பெல்லாம், `ஏன்  இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்? என்று கேட்ட முதலீட்டாளர்கள் கூட தற்போது, `ஏன் இந்தியாவில் முதலீடு செய்யக் கூடாது?  என்று கேட்கும் நிலைக்கு நாடு முன்னேறியுள்ளது.

வார்த்தை ஜாலமில்லை
விருது பெற்ற ரத்தன் டாடா பேசிய போது,  தொழில்துறையில் இருந்த இத்தனை ஆண்டுகளிலும், என்ன செய்திருக்க  வேண்டும் என்று பிரதமர் விரும்பினாரோ, அதையே செய்துள்ளேன். கொரோனா தொற்று  காலத்திலும் அவர் நாட்டை திறம்பட வழிநடத்தியதற்கு கடமைப்பட்டிருக்கிறோம்.  அவரது முயற்சிகளில் எந்த வார்த்தை ஜாலமும் இல்லை, தன்னை அவர்  முன்னிலைப்படுத்தி கொண்டதும் கிடையாது, என்றார்.

Tags : Modi ,Speech ,Assocham Conference , World leaders have high hopes for the Indian economy: FDI inflows into the Corona era: PM Modi addresses Assocham conference
× RELATED பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் நரேந்திர மோடி..!!