×

2வது முறையாக சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு

காங்டாக்: சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் நேற்று பதவியேற்றுக்கொண்டார். மக்களவை தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 32 இடங்களில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச் கட்சி 31 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை பெற்றது. கடந்த 2019ம் ஆண்டு வரை சுமார் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த எதிர்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக எஸ்கேஎம் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நேற்று புதிய அரசு பொறுப்பேற்றது. பல்ஜோர் மைதனத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் எஸ்கேஎம் கட்சியின் தலைவர் பிரேம் சிங் தவாங் இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். 11 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இவர்களில் 3 பேர் நேபாள மொழியிலும், 8 பேர் ஆங்கிலத்திலும் பதவியேற்றனர். கடந்த முறை அமைச்சராக இருந்தவர்களில் 4 பேருக்கு மட்டுமே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவை காண்பதற்காக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழா நடைபெறும் இடத்தில் திரண்டு இருந்தனர். முதல்வர் பதவியேற்றதும் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர். மாநிலத்தில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* பெண் அமைச்சர்கள் இல்லை
எஸ்கேஎம் கட்சி சார்பாக முதல்வரின் மனைவி கிருஷ்ணகுமாரி ராய் உட்பட 4 பெண்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். எனினும் தமாங் அமைச்சரவையில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

* ஆட்சி செய்வதற்காக நான் பிறக்கவில்லை
பிரதமராக மோடி தனது 3வது பதவிக்காலத்தை நேற்று தொடங்கியதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் நேற்று பேசினார். அப்போது அவர், ‘‘கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் அலுவலகம் என்பது மிகப்பெரிய அதிகார மையமாக பார்க்கப்பட்டது. ஆனால் இது எனது அலுவலகம் அல்ல, மோடியுடையது அல்ல.

இது மக்களின் அலுவலகம். நான் ஆட்சி செய்வதற்காக பிறக்கவில்லை. அதிகாரத்தை குவிக்க வேண்டுமென நினைக்கவில்லை. இந்தியாவின் 140 கோடி மக்கள் எப்போதும் என் மனதில் இருக்கிறார்கள். அவர்களை கடவுளின் வடிவமாக பார்க்கிறேன். தேர்தல் பிரசாரத்தின் போது மக்களிடம் வலிமை, அர்ப்பணிப்பு, புதிய தீர்மானத்திற்கான ஆற்றலை கண்டேன்.

அதனால்தான் நாட்டுக்கு சேவை செய்யும் வாய்ப்பை மீண்டும் அவர்கள் எனக்கு தந்துள்ளனர். தேசம் முதலில் என்பதே எனது ஒரே குறிக்கோள், வளர்ச்சி அடைந்த இந்தியா என்பதே ஒரே உந்துதல், உங்களிடமும் அதையே நான் எதிர்பார்க்கிறேன். 2047ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக வேண்டும் என்ற இலக்கை அடைய 24 மணி நேரம் உழைக்கப் போகிறேன்’’ என்றார்.

The post 2வது முறையாக சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Prem Singh Tamang ,Chief Minister of ,Sikkim ,Chief Minister ,Lok Sabha elections ,Sikkim State Assembly elections ,Sikkim Kranthikari Morch ,Dinakaran ,
× RELATED சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் 9ம் தேதி பதவியேற்பு