×

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்று துவங்குகிறார் முதல்வர் எடப்பாடி

சேலம்: சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியில் இன்று காலை துவங்குகிறார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 3 நாட்களாக சேலத்தில் முகாமிட்டு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். நேற்றைய தினம்,சேலம் மாவட்டம் ஏ.வாணியம்பாடி, முத்துநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் அம்மா மினி  கிளினிக்கை திறந்து வைத்தார். பின்னர், ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்தினார்.கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது: சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளேன். நாளைய தினம் (இன்று) காலை, எனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு உட்பட்ட பெரியசோரகையில் இருக்கும் சென்றாயர் ஆலயத்தில் சாமி  கும்பிட்டு, பிரார்த்தனை செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கவுள்ளேன். தமிழகம் முழுவதும் பல இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளதால்,அடிக்கடி எடப்பாடிக்கு வர முடியாது.

அதனால்,தற்போதே பிரசாரத்தை தொடங்க ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது.  லாரி உரிமையாளர்கள் கூறியதுபடி குறிப்பிட்ட நிறுவனங்களில்தான் ஜிபிஎஸ் கருவிகள் வாங்க வேண்டும் என மாநில அரசு கூறவில்லை. அது தவறான கருத்து. மத்திய அரசு கூறியதை மாநில அரசு பின்பற்றுகிறது.அதிலும்,நாங்கள்  சுற்றறிக்கை மட்டும் தான் வெளியிட்டோம்.தரமான நிறுவனங்களின் கருவிகளைத்தான் பொருத்த வேண்டும் என்பதற்காக அப்படி தெரிவித்துள்ளார்கள்.அதற்காக அசம்பிள் கருவிகளை பொருத்த முடியுமா?.
காஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தியிருக்கிறது. அதனை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளேன். அதிமுக கூட்டணியில் என்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்தது, புதிதாக பாஜ மாநில தலைவர் பொறுப்புக்கு  வந்தவருக்கு தெரியுமோ,தெரியாதோ என்று தெரியவில்லை. ஆனால், அவர்களின் தேசிய தலைவருக்கு தெரியும்.

கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும், வரும் சட்டமன்ற  தேர்தலிலும் முழுமையாக கூட்டணியில் தொடருகிறது. பாஜவுடன் கூட்டணி தொடரும் என்பதை ஏற்கனவே அறிவித்துள்ளோம்.
 மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாநில அரசு சார்பில் தேவையான நிலம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. அந்த நிலத்தை மத்திய அரசு தான்,இன்னும் எடுத்துக்கொள்ளாமல் உள்ளது. ஓரிடத்தில் குழாய்கள் வருவதாக கூறினர்.அதற்கு பதிலாக  22 ஏக்கர் நிலம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. நிலத்தை கையெழுத்து போட்டு பெற வேண்டிய அதிகாரி,கொரோனா பரவல் காரணமாக இன்னும் வரவில்லை. அவருக்கும் ஏற்கனவே தபால் அனுப்பியிருகிறோம். நிலம் கொடுத்து 11 மாதம்  நிறைவடைந்துவிட்டது.அவர்கள் தான் வந்து பெற்றுக்கொள்ள வேண்டும். மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவது என்ற எண்ணமே இல்லை. இதனை பலமுறை தெரிவித்து விட்டோம். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஒவ்வொரு தொகுதிக்கும் அதிமுக 5 கோடி ஒதுக்கீடு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஓமலூரில் அதிமுக அலுவலகத்தில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஒவ்வொரு தொகுதிக்கும் 5 கோடி ரூபாய் ஒதுக்க இருக்கிறேன். எனவே வார்டு செயலாளர்கள் அவர்கள் பகுதியில் ரோடு வசதி, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் தேவை குறித்து அந்தந்த எம்எல்ஏவிடம் பட்டியல் கொடுங்கள்.  அவர்கள் ஒதுக்கப்பட்ட தொகையை வைத்து நடவடிக்கை மேற்கொள்வார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.



Tags : Edappadi ,election campaign ,Salem district , Chief Minister Edappadi starts his election campaign in Salem district today
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...