×

103 கிலோ தங்கம் மாயமான விவகாரம்: மாஜி ஏ.டி.ஜி.பியிடம் சிபிஐ விசாரணை: முன்னாள் தமிழக டிஜிபிக்கு சம்மன்

சென்னை: சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில் 103 கிலோ மாயமானது குறித்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் ஏடிஜிபி அருணாச்சலத்திடம், சென்னையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  மேலும், முன்னாள் சட்டம்- ஒழுங்கு டிஜிபி அசோக்குமாரிடம் விசாரணை நடத்த அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த விவகாரம் தமிழக போலீசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்ட விரோதமாக தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சிபிஐக்கு புகார் வந்ததைத் தொடர்ந்து, சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் 2012ம் ஆண்டு சோதனை நடத்தினர். சோதனையில்  400.47 கிலோ தங்கம் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.   இதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணையில் மத்திய கனிமம் மற்றும் உலோக வணிக கழகத்தின் அதிகாரிகளின் தயவில் சுரானா நிறுவனம் விதிகளுக்கு முரணாக தங்கத்தை இறக்குமதி ெசய்தது தெரியவந்தது.

இதனால், சுரானா  நிறுவனத்தின் மீதும் அந்த நிறுவனத்துக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் ஊழல் தடுப்பு சட்டம் மற்றும் கூட்டுசதி உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா  நிறுவனத்தில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டு சீலிடப்பட்டது. அந்த லாக்கர்களின் 72 சாவிகளும் 400.47 கிலோ பறிமுதல் செய்ததாக தயாரிக்கப்பட்ட பட்டியல் ஆவணமும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.   இந்நிலையில் ஏற்றுமதி மேம்பாடு மண்டலத்திடம் சுரானா நிறுவனம் சான்றிதழ் பெற்று சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்ததாக சுரானா நிறுவனத்தின் மீது 2013ல் சிபிஐ மேலும் ஒரு வழக்கை பதிவு செய்தது.  அப்போது, சிறப்பு  நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்யும்போது புதிய வழக்கிற்காக 400.47 கிலோ தங்கத்தை தருமாறு சிபிஐசிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.  இதற்கிடையே சுரானா நிறுவனம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்ட்டர்டு ஆகிய வங்கிகளிடம் கடனாக வாங்கிய ₹1160 கோடியை திரும்ப  செலுத்தாமல் இருந்தது.  

 இதையடுத்து, வங்கிகள் பறிமுதல் செய்த தங்கத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு தேசிய கம்பெனி லா போர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து, தேசிய கம்பெனி லா போர்டு சென்னையை சேர்ந்த சி.ராமசுப்பிரமணியன் என்பவரை  சுரானா நிறுவனத்தின் சொத்துக்களுக்கு நிர்வாகியாக அறிவித்தது. அவர் வங்கிகளின் பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து, ராமசுப்பிரமணியன் சுரானா நிறுவனத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட 400.47  கிலோ தங்கத்தை திரும்ப தருமாறு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் தங்கத்தை திரும்ப தர சிபிஐக்கு உத்தரவிட்டது. சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த  போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தை காணவில்லை.

 இதையடுத்து, 103.864 கிலோ தங்கத்தை ஒப்படைக்க கோரி ராமசுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான சிறப்பு வக்கீல்  சீனிவாசன், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டபோது சுரானா நிறுவனத்தில் உள்ள எடை மிஷினில்தான் எடைபோடப்பட்டது. தனி சாட்சி முன்னிலையில் எடை போடப்பட்டது. ஆனால், தவறுதலாக 400.47 கிலோ என்று பதிவு செய்யப்பட்டது  என்றார். இதையடுத்து 103 கிலோ தங்கம் மாயமானது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் உத்தரவிட்டார். இந்தநிலையில் சிபிஐக்கு பெரிய களங்கமாக கருதப்படும் தங்க கட்டிகள் காணாமல் போன விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகள் தனியாக விசாரணையை தொடங்கியுள்ளனர். தங்கம் மாயமான காலத்தில் சிபிஐயில் இயக்குநராக இருந்தவர் ரஞ்சித்  சின்கா. தென் மண்டல இணை இயக்குநராக(ஐஜி அந்தஸ்தில்) இருந்தவர் அசோக்குமார். டிஐஜியாக இருந்தவர் அருணாச்சலம்.

எஸ்பியாக இருந்தவர் ஈஸ்வரமூர்த்தி. இவர்கள்தான் இந்த வழக்கை கையாண்டவர்கள். அதில் அசோக்குமார்,  தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர். அருணாச்சலம் ஏடிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர். ஈஸ்வரமூர்த்தி, தற்போது உளவுத்துறை ஐஜியாக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், ஓய்வு பெற்ற ஏடிஜிபி அருணாச்சலத்துக்கு சம்மன் அனுப்பிய சென்னை மண்டல சிபிஐ அதிகாரிகள் நேற்று காலை முதல் மாலை வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு பங்களாவில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது  தங்க கட்டிகள் மாயமானது குறித்து அவரிடம் கேள்விகளை கேட்டனர். மேலும் இந்தக் காலக்கட்டத்தில், சுரானா மீதான தங்க கடத்தல் வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிட்டதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவும் தற்போது  பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் அருணாச்சலத்திடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். வழக்கை யார் பரிந்துரையின்பேரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், விசாரணை நிலையிலேயே ரத்து  செய்துள்ளீர்கள்.

உங்களுக்கு உத்தரவிட்டது யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அசோக்குமாரிடம் அடுத்த வாரம் விசாரணை நடத்த திட்டமிட்டு அவருக்கு சம்மன்  அனுப்பியுள்ளனர். அசோக்குமார், தற்போது டெல்லி மாநிலத்தில் முதல்வர் கெஜ்ரிவாலின் ஆலோசகராக உள்ளார். இரு போலீஸ் அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப் பிடி விசாரணையை தொடங்கியது போலீஸ் வட்டாரத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2012ம் ஆண்டு ரஞ்சித் சின்கா சிபிஐ இயக்குநராக இருந்தபோது, பல வழக்குகளில் முறையாக விசாரணை நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. தொழிலதிபர் சுரானா, ரஞ்சித் சின்காவுக்கு நெருக்கமானவராக இருந்ததாகவும்  கூறப்படுகிறது. அவருக்கு பல அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ரஞ்சித் சின்காவுக்கு அசோக்குமார், அருணாச்சலம் ஆகியோர் நெருக்கமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் தங்க கட்டிகள் மாயமானது,  வழக்கை கைவிட்டது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : CBI ,ADGP ,Tamil Nadu , 103 kg gold scam: CBI probe into ex-ADGP: Former Tamil Nadu DGP summoned
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...