×

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? : சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் கடும் கண்டனம்

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா என்று சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருட்கள் விற்ற புகாரில் டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இதில், மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், முன்னாள் டிஜிபி , சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக 2022 நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்பதால் பிழையை சரி செய்து விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்ய விசாரணை அதிகாரிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்டோருக்கு எதிராக விசாரணை நடத்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன் அண்மையில் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தொடர்ந்து காரணங்களை கூறி வருவதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி மலர் வாலன்டினா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணைக்கான ஒப்புதல் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு ஒப்புதல் அனுமதி கிடைக்கவில்லை என 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா என்று காட்டமாக தெரிவித்தார். மேலும் வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது சிபிஐ பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே 2ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? : சி.பி.ஐ.க்கு நீதிமன்றம் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : gutka ,AIADMK ,CBI ,CHENNAI ,Delhi CBI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...