×

அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு துளி சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதிலேயே மோடி அரசு கவனம் : வேல்முருகன் பாய்ச்சல்!!

சென்னை : பிரதமர் மோடி ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகாரம் செய்து வருவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.   

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேளாண் சட்டத்திருத்தங்களை எதிர்த்து டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் இருந்து குஜராத் விவசாயிகளை தடுத்து நிறுத்தும் வகையில் பல்வேறு ஒடுக்குமுறைகளையும், அச்சுறுத்தல்களையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது மோடி அரசு.மோடி பிறந்த மண்ணாகிய குஜராத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த பல்பாய் அம்பாலியா, யாக்கூப் குராஜி, ஜயேஷ் பட்டேல் மற்றும் பல்வேறு தலைவர்கள் ஒன்றிணைத்து, குஜராத் கிசான் சங்கர்ஷ் சமிதியை உருவாக்கியுள்ளனர். இக்கூட்டத்தில் டெல்லி போராட்டத்தில் கலந்துகொண்டு தங்களது ஆதரவைத் தெரிவிக்கத் திட்டமிட்டனர்.

இதனையறிந்த குஜராத் அரசு, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளது. தொடர்ந்து, குஜராத் விவசாய சங்கத் தலைவர்களின் அழைப்புகள், வாட்சப் போன்றவற்றை காவல் துறையினர் தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது.விவசாய சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுப்பதற்கு முந்தைய நாளில், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பத்திரிகையாளர் சந்திப்பு மூலம் விவசாயிகளுக்கு ஆதரவளிக்கக் கூடாது என குஜராத் வியாபாரிகளுக்கு அறிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து 144 தடையுத்தரவை பிறப்பித்தது குஜராத் அரசு. இவையனைத்தும் ஒரு அச்சமிக்க சூழலை உருவாக்குவதற்காகவே போடப்பட்டது.

இதனிடையே, போராட்டத்தில் விவசாயிகள் படும் வேதனையை தாங்கி கொள்ள முடியாத நிலையில், சீக்கிய மதகுரு தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டது மிகுந்த வருத்தமளிக்கிறது .
அதுமட்டுமின்றி, டெல்லி போராட்டக் களத்தில் 20 விவசாயிகள் உயிரிழந்துள்ளது வேதனையளிக்கிறது. ஆனாலும், தங்களது உயிரை விட்டாலும் விடுவோமே தவிர, கோரிக்கைகள் நிறைவேறும் வரை வீடு திரும்ப மாட்டேன் என நெஞ்சுறுதியோடு விவசாயிகள் கூறி வருகின்றனர்.இந்தியாவின் வேளாண்மையை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் சட்டங்களை ரத்து செய்வதே பிரச்சனைக்கான தீர்வு. அதுவரை போராட்டத்தைக் கைவிடுவதற்கில்ல என்று விவசாயிகள் அறிவித்துவிட்டார்கள்.

நாடாளுமன்ற மக்களவையில் அறுதிப் பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக, எதை வேண்டுமானாலும் செய்துவிடலாம் என்று மோடி அரசு கருதுகிறது. தாங்கள் அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்ற போக்கில் மோடி அரசு சர்வாதிகாரம் செய்து வருகிறது.எல்லை மீறினால், மக்கள் சக்தி கிளர்ந்தெழுந்து பாடம் புகட்டும் என்பதைத் தற்போது மோடி அரசுக்கு விவசாயிகள் தக்க பாடம் கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளின் போராட்டம் என்பது நாட்டின் உணவு பாதுகாப்புக்கானது. அரசியலமைப்பு சட்டப்படியான வாழ்வுரிமைக்கானது. இதனையெல்லாம் அறியாமல், அம்பானி அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு துளி சேதாரம் வந்துவிடக் கூடாது என்பதில் மோடி அரசு கவனமாக இருந்து வருகிறது,.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Tags : government ,Modi ,corporates ,Velmurugan ,Ambani , Ambani, Adani, Modi government, focus, Velmurugan, leap
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...