×

விவசாயிகள் போராட்டம் எதிரொலி சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது

புதுடெல்லி: விவசாயிகளின் சாலை அடைப்பு தொடர் போராட்டத்தால் மாநிலத்தின் முக்கிய சாலைகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து திண்டாட்டம் ஏற்பட்டு உள்ளது. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும் விவசாயிகள் குவிந்துள்ளனர். மாநிலத்தின் அனைத்து எல்லைகளையும் தற்போது விவசாயிகள் ஆக்ரமித்து உள்ளதால், டெல்லிக்கு செல்லவும், அங்கிருந்து குருகிராம், நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத் செல்லவும் முடியாமல் பயணிகள் திண்டாடுகின்றனர். அதே சமயம் முதியவர்கள், குழந்தைகள், ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் வாகனங்களை விவசாயிகள் வழி மறிக்காமலும், ஒதுங்கிக் கொண்டு வழி விட்டும் அமைதி போராட்டத்தை தொடர்கின்றனர். போராட்டம் தொடங்கி 4 வாரமாகி உள்ள நிலையில், மத்திய அரசு மேற்கொண்ட 5 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளது.

நிலமையின் விபரீதத்தை உணர்ந்த உச்ச நீதிமன்றம், விவசாயிகளை மத்திய அரசு அணுகிய போக்கு சரியில்லை என்றும், மத்திய அரசு தரப்பில் அமைச்சர்கள், வல்லுநர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் இருந்து சங்க தலைவர்கள் என இரு தரப்பிலும் சரி சமமாக ஆட்களை தேர்வு செய்து கமிட்டி அமைத்து, அந்த கமிட்டி மூலமாக விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் எனக் கூறியது. உச்ச நீதிமன்றம் அமைக்கும் கமிட்டியால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது என விவசாய சங்கங்கள் கூட்டமைப்பு கருதுகிறது. அசைந்து கொடுக்காமல் மத்திய அரசும், வலியுறுத்தலில் விவசாயிகள் விடாப்பிடியாக உள்ளதாலும், இயல்பு வாழ்க்கை டெல்லியில் பெருமளவு பாதிப்பு கண்டுள்ளது. குறிப்பாக வாகன போக்குவரத்து முக்கிய சாலைகளில் முடங்கியது. மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்களும், ஒன்றை ஒன்று முந்திச் செல்ல ஆர்வம காட்டுவதால், அந்த சாலைகளிலும் போக்குவரத்து பெரும் திண்டாட்டம் ஆகியுள்ளது.

போக்குவரத்து மாற்றம் குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் எல்லைகள் மூடப்பட்டு உள்ளதால், மாற்று வழிகளில் செல்ல பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். அதுபோல சிங்கு, அவ்சந்தி, பியாவ் மணியாரி, சபோலி, மங்கேஷ் எல்லைகளையும் தவிர்த்து லம்பூர், சபியாபாத், சிங்கு ஸ்கூல் டோல் பிளாசா வழியாக வாகனங்கள் செல்லலாம். புறவட்டப்பாதை, ஜிடிகே சாலை, தேசிய நெடுஞ்சாலை 44ல் ஒரு போதும் செல்ல வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.




Tags : roads ,standstill , Echoing the peasant struggle echoed traffic on the roads
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...