×

வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் முடிந்தது:ஆர்வத்துடன் ஏராளமானோர் விண்ணப்பம்: ஜன.20ம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை: வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் நேற்றுடன் சிறப்பு முகாம்கள் முடிந்தது. இறுதி நாளான நேற்று ஆர்வத்துடன் ஏராளமானோர் விண்ணப்பித்தனர். வருகிற 20ம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. வருகிற ஜனவரி 1ம் தேதி தகுதியேற்கும் நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை தேர்தல் ஆணையம் அறிவித்து. அதன்படி கடந்த 16ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் (பெரும்பாலும் பள்ளி கட்டிடத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன. அந்த பட்டியலில் தமிழகத்தில் 6,10,44,358 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் ஆண்கள் 3,01,12,370, பெண்கள் 3,09,25,603, மூன்றாம் பாலினத்தவர் 6,385 பேர் அடங்குவர். இந்த வரைவு வாக்காளர் பட்டியல் மாநகராட்சி மண்டல அலுவலகம், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது.

இந்த இடங்களில் பொதுமக்கள் தங்களது பெயர்கள் குறித்த விபரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பதை சரிபார்த்து வருகின்றனர். தொடர்ந்து, கடந்த 16ம் தேதி முதல் 15ம் தேதி(நாளை) வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் அலுவலகம் செல்வோர் வசதிக்காக முதல் கட்டமாக கடந்த 21, 22(சனி, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடந்தது. இரண்டாம் கட்டமாக நேற்று முன்தினம் மற்றும் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இறுதி நாளான நேற்று தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குசாவடி மையங்களில் இந்த சிறப்பு முகாம் நடைபெற்றது. கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் புதிதாக பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய என ஆர்வத்துடன் வந்தனர். சில இடங்களில் நீண்ட கூட்டத்தை பார்க்க முடிந்தது. மேலும் www.elections.tn.gov.in என்ற  இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பெயர் சேர்த்தவர்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டவர்களின் விண்ணப்பங்கள் அதிகாரிகள் மூலமாக வீடு, வீடாக சென்று கள ஆய்வு நடத்தப்படும். அதன் பிறகு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும். தொடர்ந்து ஜனவரி 20ம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதாசாகு வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க (படிவம் 6) 4 லட்சத்து 81ஆயிரத்து 698 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் நீக்கம் (படிவம் 7) 1,13,930 பேர், திருத்தம்(படிவம் 8) 73,292 பேர், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க (படிவம் 8ஏ) 58,789 பேர் என மொத்தம் 7,27,710 பேர் விண்ணப்பித்துள்ளனர். பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய என சேலத்தில்51,011 பேர், கோவை 54,099 பேர், சென்னை 58,096 பேர், திருவள்ளூரில் 29,832 பேர், மதுரை 28,478 பேர், திருச்சி 24,616 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : camps ,Tamil Nadu ,
× RELATED 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு...