×

இளைஞர்கள் துணிவை கற்றுக் கொள்ளலாம் பாரதியாரின் பாடல்களை அனைவரும் படிக்க வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்

சென்னை: ‘பாரதியாரின் பாடல்களை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும்,’ என்று பிரதமர் மோடி கூறினார். பாரதியார் பிறந்தநாளை முன்னிட்டு, ‘வானவில் பண்பாட்டு மையம்’ சார்பில் சென்னையில் நேற்று பன்னாட்டு பாரதி திருவிழா’ நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டு, பாரதி அறிஞர் சீனி விஸ்வநாதனுக்கு பாரதி விருது வழங்கினார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:பாரதியாரை யாருடனும்  ஒப்பிட முடியாது. அவர் தனது 39 ஆண்டுகால குறுகிய வாழ்க்கையில் பல  அரிய சாதனைகளை படைத்திருக்கிறார். இளைஞர்கள் பாரதியாரிடம் இருந்து  ஏராளமாக கற்றுக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக துணிவை கற்றுக்கொள்ளலாம். அவர், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்று பாடினார். பாரதியாரின்  இந்த எழுச்சியை இன்றைய இளைஞர்களிடம் காணமுடிகிறது.

அவருடைய பாடல்கள் பெண் விடுதலை, பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் ஆகியவற்றை  முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது. அதுபோன்று பெண்களுக்கு கண்ணியத்தை  கொடுக்கும் வகையில் மத்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தடைகளை  உடைத்தெறிந்து பெண்கள் சாதனை படைத்து வருகிறார்கள். இந்த புதிய  இந்தியாவைத்தான் பாரதியாருக்கு காணிக்கையாக்குகிறோம். பிரிந்து கிடக்கும்  சமூகம் வெற்றியை காணாது என்பதை பாரதியார் உணர்ந்திருந்தார். `தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் இந்த ஜெகத்தை  அழித்திடுவோம்’ என்று கூறினார். இது நமக்கு ஒற்றுமை மற்றும் ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது.  பாரதியார்  பாடல்களை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பங்கேற்று பேசினார்.

ராகுல் காந்தி அஞ்சலி
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணருக்கு உழைத்துடலம் ஓயமாட்டோம்” என்ற பாரதியின் வரிகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் மேற்கோள் காட்டி, ‘விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்ப பெற்று, தலைசிறந்த தமிழ் புலவர் சுப்ரமணிய பாரதியின் 139வது பிறந்தநாள் விழாவில் அஞ்சலி செலுத்துவோம்’ என கூறி உள்ளார்.

Tags : Youngsters ,Bhartiyar ,Modi , Youngsters can learn courage Bhartiyar's songs should be read by all: PM Modi's request
× RELATED ஒன்றிய அரசின் கொள்கைகளால்...