×

நெடுஞ்சாலைத் துறையில் ரூ.1150 கோடி டெண்டர் ஊழல்: விஸ்வரூபம் எடுக்கும் வினாக்களுக்கு முதல்வர் பழனிசாமி விடை தருக : வைகோ

சென்னை : நெடுஞ்சாலைத் துறையில் ரூபாய் 1,150 கோடி டெண்டர் ஊழல் விசுவரூபம் எடுக்கும் வினாக்களுக்கு விடை என்ன? என்று வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக முதலமைச்சரின் பொறுப்பில் உள்ள நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் விடுவதில் நடைபெறும் ஊழல்களை ஆதாரப்பூர்வமாக அறப்போர் இயக்கம் வெளியிட்டு இருக்கின்றது.தஞ்சாவூரில் சாலைப் பணிகளுக்கு ரூ.1150 கோடி மதிப்பீட்டில் கடந்த ஜூலை மாதம் பிபிஎம்சி டெண்டர் விடப்பட்டபோது, மிகவும் நல்ல நிலையில் உள்ள சாலைகள் பராமரிப்புக்காக இந்த டெண்டரில் சேர்க்கப்பட்டதையும், டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட ஒப்பந்ததாரருக்கு இந்தப் பணிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதையும் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்குச் சுட்டிக்காட்டி அறப்போர் இயக்கம் புகார் செய்தது. எனவே அந்த டெண்டர் இரத்து செய்யப்பட்டத

ஆனால் அதே பிபிஎம்சி டெண்டர் வேறு ஒரு பெயரில்இரண்டு டெண்டராகப் பிரிக்கப்பட்டது.அதில் ஒன்று 208 கி.மீ. சாலை மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு ரூ.656 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, நவம்பர் 18 ஆம் தேதி திறக்கப்பட்டது. இன்னொன்று 254 கி.மீ. சாலை ரூ.494 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டு, நவம்பர் 19 ஆம் தேதி திறக்கப்பட்டது.மேற்கண்ட இரு டெண்டர்கள் திறக்கப்படுவதற்கு முன்பாகவே அறப்போர் இயக்கம் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், “இந்த ஒப்பந்தப் பணிகள் இரண்டு நிறுவனங்களுக்கு என்று தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்து இருக்கின்றது. இது முறைகேடானது” என்று சுட்டிக்காட்டி இருந்தது.

அதன்பின்னர் டெண்டர் திறக்கப்பட்டு, அதில் இந்த இரண்டு நிறுவனங்களும் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை அறிவிப்பு வெளியிட்டது.ஒப்பந்தப் பணிகள் அனைத்தும் இ-டெண்டர் முறை என்பதால், இதில் முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.ஆனால் இ-டெண்டர் முறையில் பல்வேறு நிறுவனங்கள் ஒப்பந்தப் புள்ளியை அளித்தாலும், குறிப்பிட்ட நிறுவனத்திற்குத்தான் அந்த டெண்டர் என்று முன்கூட்டியே எப்படி முடிவு செய்யப்பட்டது? இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் யார்?

இதுவரை பிபிஎம்சி டெண்டர்களில் ஒரு கிலோ மீட்டருக்கு, ரூபாய் ஒரு கோடி என திட்ட மதிப்பீடு செய்து வந்த நெடுஞ்சாலைத் துறை, ரூ.656 கோடி டெண்டரில் ஒரு கிலோ மீட்டருக்கு 3.15 கோடி என மதிப்பீட்டை உயர்த்தியதும், அதே போல் ரூ.494 கோடி டெண்டரில், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.1.95 கோடி என்று மதிப்பீட்டை அதிகரித்ததும் ஏன்?ஆதாரங்களுடன் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளருக்கு அறப்போர் இயக்கம் புகார் அளித்தும், குறிப்பிட்ட அந்த இரண்டு நிறுவனங்களுக்கு ரூ.1150 கோடி டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் பின்னணியில் உள்ள ஊழல் நபர்கள் யார்?

தஞ்சாவூரில், நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை மேம்படுத்துகிறோம் என்ற பெயரிலும், பராமரிப்பு என்ற பெயரிலும் பட்டியலில் இணைத்து ரூ.1150 கோடிக்கு டெண்டர் விடுவதற்கு காரணமானவர்கள் யார்?
விசுவரூபம் எடுக்கும் இந்த வினாக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில்கூற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Palanisamy ,Vaiko , Highways Department, Tender Corruption, Viswaroopam, Chief Minister Palanisamy, Vaiko
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...