×

பேச்சுவார்த்தையை தொடரலாம்: விவசாயிகளுக்கு மத்திய அமைச்சர் அழைப்பு

புதுடெல்லி: ‘அரசு அறிவித்திருக்கும் சட்ட திருத்தங்கள் தொடர்பாக விவசாயிகளுடன் தொடர்ந்து விவாதிக்க தயாராக இருக்கிறோம்,’ என்று வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு புதன்கிழமையன்று எழுத்துப்பூர்வமான சமரசத் திட்டத்தை அளித்தது. ஆனால், அவற்றை விவசாயிகள் ஏற்க மறுத்தனர். அரசுடன் நடத்த இருந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தையையும் ரத்து செய்தனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நரேந்திர சிங் தோமர், கூறியதாவது: தொற்று அபாயத்திலும், டெல்லியில் நிலவும் கடும் குளிரிலும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் குறித்து உண்மையில் கவலைப்படுகிறோம். அவர்களின் கருத்தைக் கேட்டு, சட்டங்களைத் திருத்த தயாராக உள்ளோம். ஆனால், அவர்கள் சட்டங்களை மொத்தமாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள வலியுறுத்துகிறார்கள்.

அரசின் சமரசத் திட்டத்தில் உடன்பாடு இல்லை என்றால், அது தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். ஆனால், பேச்சுவார்த்தையைப் புறக்கணித்து டெல்லியை இணைக்கும் முக்கிய சாலைகளை முடக்குவதாக அறிவித்திருப்பது, சரியான வழிமுறை அல்ல. குறைந்தபட்ச ஆதார விலை,  மண்டிகள் முறையை புதிய சட்டங்கள் பாதிக்காது. கார்ப்பரேட்டுகள் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து விடுவார்கள் என்றும் சந்தேகம் எழுப்புகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் ஏற்கெனவே விவசாய வேலைகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. தேவையான உள்கட்டமைப்புகளை இரு தரப்பிலும் உருவாக்கிக் கொண்டு, ஒப்பந்தத்துகுப் பிறகு விலகிக் கொள்ளலாம்’’ என்று கூறினார். அப்போது அமைச்சர் பியூஷ் கோயலும் உடனிருந்தார்.

* ரயில் மறியல் நடத்தப்படும்
‘விவசாயம் என்பது மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது. இதில் மத்திய அரசு தலையிட்டு சட்டம் இயற்ற முடியாது. எங்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, புதிய வேளான் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும். இல்லாவிட்டால் ரயில் மறியல் போராட்டமும் தொடங்கும். இதுதொடர்பான தேதியை முடிவு செய்த பின்னர் அறிவிப்போம்’ என்று விவசாய சங்கப் பிரதிநிதிகள் நேற்று கூறியுள்ளனர்.

Tags : Negotiations ,Union Minister , Negotiations can continue: Union Minister calls on farmers
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...