×

புயலுக்கு முன் கடலுக்கு சென்றுள்ள தமிழக மீனவர்கள் கரை ஒதுங்க அனுமதிக்க வேண்டும்: கர்நாடகா, கேரளா, கோவா மாநிலத்துக்கு அரசு கடிதம்

சென்னை: சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென் கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கன்னியாகுமரியில் இருந்து கிழக்கே 850 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது, இது அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) வலுவடைந்து புயலாக மாறும். இதன்மூலம் வரும் நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். நேற்று முன்தினம் நிலவரப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 491 இயந்திர படகுகளும், 35 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 172 ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் மீன்பிடிக்க சென்றுள்ளன. தற்போது புயல் சின்னம் ஏற்பட்டுள்ளதால் அதிக காற்று காரணமாக தமிழக கரைக்கு திரும்புவதில் பிரச்னை இருக்கலாம்.

அதனால் தமிழக படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க அனுமதிக்கும்படி கர்நாடகா, கேரளா, கோவா மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு யூனியன் பிரதேச மீன்வள துறைகளுக்கு தமிழக அரசு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக படகுகள் பாதுகாப்பாக கரை ஒதுங்க உதவிடும் வகையில் அதிகாரிகள் குழுக்கள் அண்டை மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களான, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 7605 ஏரிகளில், 979 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.


Tags : fishermen ,Tamil Nadu ,sea ,storm ,Karnataka ,Kerala ,states ,Goa , Tamil Nadu fishermen who went to sea before the storm should be allowed to set sail: Government letter to Karnataka, Kerala and Goa
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...