காரைக்குடி பகுதியில் வீட்டிற்குள் புகுந்து உணவுகளை சூறையாடும் குரங்கு கூட்டம்

காரைக்குடி: காரைக்குடி நகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்கு தொல்லை அதிகரித்து வருகிறது. குரங்கு விரட்டி சிறுமி ஒருவர் உயிர் இழந்துள்ள நிலையிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட செக்காலை வீதிகள், வாட்டர் டேங்க், சுப்பிரமணியபுரம் பகுதி மற்றும் சங்கராபுரம் ஊராட்சி பர்மா காலனி பகுதியில் குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் சாலைகளில் ஹாயாக குரங்குகள் உலா வருகின்றன. இங்குள்ள வீடுகளின் மேல்தளத்தில் கூட்டமாக முகாமிடும் குரங்குகள் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்து உணவு பொருட்களை சூறையாடுவதோடு விரட்ட வருபவர்களை விரட்டி கடிக்க வருகின்றன.

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சல் போட்டவுடன் கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமி குரங்குக்கு பயந்து கிழே விழுந்து பலத்த காயமடைந்ததில் சிகிக்சை பலனின்றி உயிர் இழந்தாக கூறப்படுகிறது. குரங்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் காலை மற்றும் இரவு நேரங்களில் பயத்துடனே வீட்டிற்குள் இருக்க வேண்டியநிலை உள்ளது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், குரங்கு தொல்லையால் வீட்டிற்குள் இருக்கவே பயமாக உள்ளது. 10க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டின் மொட்டைமாடியில் முகாமிட்டு அமர்ந்து கொள்கின்றன. இதனால் துணிகாயப்போட மற்ற பிற பயன்பாட்டுக்கு மேலே செல்லவே பயமாக உள்ளது. குரங்குகளை பிடித்து அவற்றை காட்டுப்பகுதியில் விட வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் பயனற்ற நிலையே உள்ளது. குரங்கு விரட்டியதில் சிறுமியை இழந்துள்ள நிலையிலும் சம்மந்தப்பட்ட துறையினர் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.

Related Stories:

>