×

நெல்லுக்கு மாற்றாக சிறுதானிய பயிர்களை பயிரிடும் விவசாயிகள்

திருமங்கலம்: திருமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் நெல்லுக்கு மாற்றாக குறைந்த செலவில் அதிக விளைச்சல் தரக்கூடிய வரகு, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களை விவசாயிகள் அதிகளவில் பயிரிடத்துவங்கியுள்ளனர்.
மதுரை திருமங்கலம் ஒன்றியத்தில் 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் அமைந்துள்ளன. கண்மாய்களில் நீர் இருந்தால்தான் நெல் விவசாயம் செய்ய இயலும். தற்போதைய மழையில் பெரிய அளவில் திருமங்கலம் ஒன்றியத்தில் கண்மாய்கள் நிரம்பவில்லை. இதனால் நெல்சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். நெல் பயிரிட அதிகளவில் தண்ணீர் தேவைப்படுவதால் விவசாயிகள் மாற்று யோசனையாக குதிரைவாலி, வரகு உள்ளிட்டவைகளை பயிரிடத் துவங்கியுள்ளன. குறைந்த செலவில் அதிகளவில் விளைச்சல் தரக்கூடிய இந்த சிறுதானியங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். சிறுதானியங்களை பயிரிட மானாவாரி மற்றும் புன்செய், நன்செய் நிலங்களே போதுமானதாக உள்ளது. மேலும் மூன்று நான்கு முறை மழை பெய்தாலே போதுமானதாகும்.

குறைந்தளவே தண்ணீர் தேவையும் உள்ளது. சிறுதானியங்கள் தற்போது அதிகளவில் விற்பனையாகிறது. கொரோனா காலமாக இருப்பதால் பொதுமக்கள் பலரும் நோய் எதிர்ப்புசக்தி மிகுந்த சிறுதானியங்கள் பக்கம் தங்கள் கவனத்தை திரும்பியுள்ளனர். இதனால் குவிண்டாலுக்கு சிறுதானியங்கள் 1500 முதல் 3000 வரையில் போகிறது. இதனால் இந்தாண்டு பல்வேறு விவசாயிகளும் குதிரைவாலி, தினை, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை திருமங்கலம் ஒன்றியத்தில் பயிரிட்டு விவசாயம்செய்து வருகின்றனர். உலர்களம் இல்லை. விளையும் சிறுதானியங்களை பிரித்து காயவைக்க போதுமான அளவு உலர்களங்கள் இல்லை. எனவே கிராமபுறங்களில் விவசாயிகள் அவற்றை சாலையில் பரப்பி காயவைத்து தரம்பிரிக்கின்றனர். இவ்வாறு பிரிக்கும் போது அவற்றால் விபத்து அபாயம் உண்டாகிறது. இதனை தடுக்கும்வகையில் அதிகளவில் உலர்களங்கள் அமைக்க அதிகாரிகள் முன்வரவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : For paddy, as an alternative, small grain crop, farmers
× RELATED 104 டிகிரியுடன் வாட்டி வதைக்கும் வெயில்...