×

அழியும் பட்டியலில் உள்ள ‘ஹம்ப் பேக்டு மஹ்சீர்’ என்ற மீன்களின் கடைசி புகலிடமாக விளங்கும் மாயாறு

ஊட்டி: ‘காவிரி ஆற்றின் புலி’ என்று அழைக்கப்படும் ‘ஹம்ப் பேக்டு மஹ்சீர்’ என்ற அழியும் பட்டியலில் உள்ள மீன்களின் கடைசி புகலிடமாக முதுமலையின் மாயாறு விளங்கி வருகிறது. ‘ஹம்ப் பேக்டு மஹ்சீர்’ எனப்படும் நன்னீரில் வாழ கூடிய மீன் இனம், ஒரு காலத்தில் காவிரி ஆற்றில் பரவலாக அதிகளவில் காணப்பட்டது. 54 கிலோ எடை வரை வளரக்கூடிய இவ்வகை மீன், ஆரஞ்சு பைன் மஹ்சீர் எனவும் அழைக்கப்படுகிறது.

மழை பெய்யும் சமயங்களிலும், இனப்பெருக்கத்திற்காக முட்டையிடும் சமயங்களிலும் நீர் பாயும் திசைக்கு எதிர்திசையில் நீந்த கூடிய தன்மையுடையது. இதனால் காவிரி ஆற்றின் புலி என அடைமொழியால் அழைக்கப்படுகிறது.
எதிர்திசையில் நீருக்குள் காணப்படும் பாறை இடுக்குகளில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். காவிரியில் பரவலாக காணப்பட்ட இம்மீன் வகை கால போக்கில் காவிரியில் மற்ற மீன் இனங்களின் கலப்பு மற்றும் அணைகள், தடுப்பணைகள் அதிகளவு கட்டப்பட்டது போன்ற காரணங்களால் அதன் எண்ணிக்கை ெவகுவாக குறைந்துள்ளது. நன்னீர் மீன் இனங்களின் ஒன்றாக கருத்தப்படும் இம்மீன் தற்போது அழியும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தற்போது இவ்வகை மீன், தென்னிந்தியாவில் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள ஆற்றிலும், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்திலும் காணப்படுகிறது. தமிழகத்தில் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு இடையே ஓடக்கூடிய மாயாற்றில் காணப்படுவதாக தென்னிந்திய வனவிலங்குகள் பாதுகாப்பு சங்கம் (டபுள்யு.ஏ.எஸ்.ஐ.) தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பானது கடந்த 50 ஆண்டுகளாக கடந்த அரை நூற்றாண்டு காலமாக இந்த உயிரினங்களை ஆராய்ச்சி செய்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கர்நாடகாவில் இரு ஆறுகளில் காணப்படும் ஹம்ப் பேக்டு மஹ்சீர் மீனுடன், மற்ற வகை மீன்களும் காணப்படுவதாகவும், இதனால் இவற்றிற்கு இடையே கலப்பினம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், ஆனால் மாயாற்றில் இவ்வகை மீன்கள் மட்டும் காணப்படுவதால் இவற்றின் கடைசி புகலிடமாக மாயாறு விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய வனவிலங்குகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறுகையில், ‘ஹம்ப் பேக்டு மஹ்சீர்’ காவிரியாற்றில் பரவலாக இருந்தது. அதன் பின் காவிரியில் அணை, தடுப்பணைகள் அதிகரித்தது, மற்ற மீன் இனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது போன்ற காரணங்களால் அவற்றின் எண்ணிக்கை குறைந்தது. கர்நாடகாவில் இரு ஆறுகளில் காணப்படுகிறது.

தமிழகத்தில் மாயாற்றில் தெங்குமரஹாடா முதல் மங்களபட்டி பவர் பவுஸ் வரையிலான வழித்தடத்தில் இம்மீன்களின் பழைமையான கடைசி புகலிடமாக உள்ளது. பவானிசாகர் அணை மற்றும் மாயாறு நீர்வீழ்ச்சி ஆகியவை இருப்பதனால் வேறு மீன் இனங்கள் இப்பகுதிக்கு வருவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கு ‘ஹம்ப் பேக்டு மஹ்சீர்’ அதிகளவில் காணப்படுகிறது. இரு மாநில வனத்துறையும் ‘ஹம்ப் பேக்டு மஹ்சீர்’ மீன்கள் பாதுகாப்பிற்கு ஆதரவு அளித்து வருகின்றன.

அடுத்த கட்டமாக இவற்றை பாதுகாக்க திட்டம் வகுக்கப்பட்டு அவற்றை செயல்படுத்துவதன் அவற்றின் மிஞ்சியுள்ள எண்ணிக்கையை பாதுகாப்பதுடன், அதிகரிக்கவும் முடியும், என்றனர். தெங்குமரஹாடா கிராமத்தில் ‘ஹம்ப் பேக்டு மஹ்சீர்’ மீன்களை இனப்பெருக்கம் செய்ய முடியுமா? என்பது குறித்து ஆராய வேண்டும். அந்த திட்டம் வெற்றி பெற்றால் இவ்வகை மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Tags : Mayaru ,Humpbacked Mahseer , Mayaru
× RELATED கூடலூரில் கன மழை; வெள்ளத்தில் அடித்து...