×

கொசஸ்தலையாற்றின் சதுப்பு நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு: 10 லட்சம் பேர் வெள்ளத்தில் சிக்கும் அபாயம்: நடவடிக்கை எடுக்குமா அரசு?

சென்னை: கொசஸ்தலை ஆற்றின் சதுப்பு நிலப்பகுதிகளை பொதுத்துறை நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளதால் பொன்னேரி, மாதவரம், ஆர்.கே.நகர், திருவெற்றியூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 10 லட்சம் பேர் வெள்ள அபாயத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  சதுப்பு நிலக்காடுகள் உப்பு நீரில் வளரும் தன்மை கொண்டவை. பலவகைப்பட்ட உயிரினங்களுக்கு உறைவிடமாக இந்த சதுப்பு நிலங்கள் திகழ்கிறது. சதுப்புநிலக்காடுகளை அலையிடைக்காடுகள், கடலோர மரக்காடுகள், கடலில் நடக்கும் காடுகள், கடலின் வேர்கள், கடலின் மழைக்காடுகள், அலையாத்திக்காடுகள், தில்லைவனம், சுரப்புன்னைக்காடுகள், கண்டன் காடுகள் என பலவகை பெயரிட்டு அழைக்கப்படுகின்றது. உப்பு நீர் நிறைந்த கடலுக்கும், நிலத்துக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலப்பகுதி உள்ளது.

 பூமியின் மொத்த பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளது. சதுப்பு நிலங்கள் பெரும்பாலும் இயற்கையாக உருவானவை. குறிப்பாக, சுனாமியின் தாக்கத்தை குறைக்கக்கூடியவையாக இந்த சதுப்பு நிலங்கள் உள்ளது. தமிழகத்தில் பிச்சாவரம் அலையாத்திக்காடுகள் உலகிலேயே 2வது பெரிய அலையாத்திக்காடு ஆகும். இதேபோல், கோடியக்கரையை அடுத்த முத்துப்பேட்டை, சென்னையில் உள்ள பள்ளிக்கரணை, பழவேற்காடு ஆகியவை தமிழகத்தில் உள்ள முக்கிய சதுப்பு நில பகுதிகள் ஆகும். பள்ளிக்கரணை சதுப்புநிலப்பகுதி உயிரின முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. ஆனால், பல ஆண்டுகளாக சதுப்பு நிலப்பகுதிகள் எல்லாம் குப்பை மேடாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும், தொழிற்சாலை கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த சதுப்பு நிலங்கங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை எழுந்தவாறு உள்ளது.

இதேபோல், 2015க்கு முன் எண்ணூர்-பழவேற்காடு சதுப்பு நிலத்தில் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டதன் விளைவாக 2015ம் ஆண்டு சென்னையில் வந்த வெள்ளம் சதுப்புநிலங்கள் முக்கியத்துவத்தை உணர்த்தியது. ஆனால், தற்போது 667 ஏக்கர் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  கொசஸ்தலை ஆற்றில் சதுப்பு நிலப்பகுதிகளை பொதுத்துறை நிறுவனங்கள் ஆக்கிரமித்ததின் மூலம் பொன்னேரி, மாதவரம், ஆர்.கே.நகர், திருவெற்றியூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வாழும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெள்ள பாதிப்புக்கு ஆளாவார்கள் என்று எண்ணூர் கழிவெளி பாதுகாப்பு பிரச்சார இயக்கம் தெரிவிக்கிறது.

சதுப்பு நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுவதும், அதை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதும் தொடர்கதையாகி வருகிறது. பல உயிர்களுக்கும், பெருவெள்ளம் ஏற்படுவதில் இருந்து மனிதனை பாதுகாப்பதிலும் இன்றியமையா சதுப்பு நிலங்களை அரசு மீட்டெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், இயற்கை பாதுகாவலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் கூறுகையில்,  2015 பெரு வெள்ளத்திற்கு பிறகு தற்போது வரையில் சுமார் 667 ஏக்கர் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில், அனேக நிறுவனங்கள் மத்திய அரசின் நிறுவனங்கள். ஆக்கிரமிப்பில் உருவான நிறுவனங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா துவக்கி வைக்க உள்ளர். மேலும், கொசஸ்தலை ஆற்றின் தாங்கும் திறன் 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி ஆகும். இது கூவம், அடையாறு இரண்டுமே சேர்ந்த அளவை விட அதிகம். கொசஸ்தலையில் ஆக்கிரமிப்பு செய்தால் சென்னை வடக்கு, மேற்கு பகுதிகள் வெள்ளம் சூழும் பகுதிகளாக உருவாகும்.

 பாரிமுனையில் இருந்து திருவொற்றியூர் செல்லும் சாலை கடுமையான கடலரிப்பிற்கு உள்ளாகி வருகிறது. ஆனால், எண்ணூர்-பழவேற்காடு பகுதிகளில் அந்த அளவிற்கு கடலரிப்பு கிடையாது. அதற்கு காரணம் கடலுக்குள் இருக்கும் மணல் குன்றுகள். இதை அழித்து கடலிருந்து 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து பழவேற்காடு சதுப்புநிலத்தில் 2 ஆயிரம் ஏக்கரில் அதானி துறைமுகம் வந்தால் சென்னையை காப்பாற்றவே முடியாது. எண்ணூர்-பழவேற்காடு கழிமுகம் சென்னையை பாதுகாக்க முக்கியமான சுற்றுச்சூழல் தொகுதிகள். இவற்றை காலநிலை சரணாலயமாக அறிவிக்க வேண்டும். இது மீனவ மக்களை பாதுகாப்பது மட்டும் இன்றி சென்னையை பெரு வெள்ளத்தில் இருந்தும், புயலில் இருந்தும், நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கவும் அவசியம். இதை உடனடியாக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

* வெள்ள அபாயம், உப்பு நீர் நிலப்பகுதிக்குள் நுழைவது, கடல்மட்ட உயர்வு ஆகியவற்றிற்கு எதிராக பாதுகாப்பு அரணாக சதுப்பு நிலங்கள் விளங்குகிறது.
* 2015 வெள்ளத்திற்கு பிறகு காமராஜர் துறைமுகம் 114 ஏக்கர் சதுப்புநிலத்தை ஆக்கிரமித்துள்ளது.
* சதுப்பு நிலங்களை வேறு நோக்கங்களுக்கு பயன் படுத்துவதை மத்திய அரசு கைவிட வேண்டும் என தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது.
* சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்றால் வரக்கூடிய காலங்களில் சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கும்.

Tags : Kosasthalayar ,flooding ,government , Occupancy of Kosasthalaiyar swamps: 10 lakh people at risk of flooding: Will the government take action?
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...