×

கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிகளை இணைத்து சென்னை குடிநீருக்காக புதிய நீர்த்தேக்கம் தயார்

* நிலம் கையகப்படுத்த 220 கோடி  * 8 ஆண்டுகளாக நடந்த பணி நிறைவு

சென்னை: சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு 380 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் சென்னை மாநகருக்கு தினமும் 65 எம்எல்டி நீர் விநியோகம் செய்யப்படும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகள் முக்கிய பங்கு வக்கிறது. 11.25 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த நான்கு ஏரிகளின் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்னை அருகே கண்ணன் கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிகளை இணைத்து புதிய நீர் தேக்கம் அமைக்க 330 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கன அடி நீரை சேமிக்க இயலும். மேலும், தண்ணீரை இருமுறை நிரப்புவதன் மூலம் ஆண்டுக்கு 1 டிஎம்சி நீரை தேக்கி வைக்க இயலும்.  

 இந்த திட்டம் 2013 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இப்பணி 2 ஆண்டுகளில் முடிக்கப்படும் என்று கூறப்பட்டது. எனினும் இத்திட்டத்திற்காக 560.05 ஏக்கர் அரசு நிலம் உள்ளிட்ட 1,252.47 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்துவதில் அரசுக்கு பெரும் சிக்கல் இருந்தது. இதில், 500 ஏக்கர் விவசாய நிலங்கள் என்பதால், அவற்றை கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அரசு சார்பில் உரிய நிவாரணம் தரப்படும் என்று ஆரம்பத்தில் உத்தரவாதம் அளித்தனர். இதை நம்பி விவசாயிகள் இந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால், இழப்பீடு முறையாக வழங்காததை தொடர்ந்து விவசாயிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இழப்பீட்டு தொகையை  கொடுத்து விட்டு பணிகள் மேற்கொள்ளலாம் என்றது. அதன்பிறகு நிலம் கையகப்படுத்த ₹220 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இழப்பீடு தொகை வழங்கப்பட்டன. ஆரம்பத்தில் 330 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் நிலம் கையகப்படுத்த இழப்பீடு வழங்க வேண்டியிருந்ததால் திட்டத்துக்கு ₹50 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால், திட்டச்செலவு 380 கோடியாக அதிகரித்தது.

இதனால் பணி 2 ஆண்டுகள் மந்த கதியில் தான் நடந்தது. இதனால், 2015க்குள் முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.இந்நிலையில், 2018ல் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் முடிக்கப்பட்ட பிறகே, இப்பணிகள் வேகமெடுக்க தொடங்கியது.தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட் அருகே உள்ள ஜங்காலபள்ளி பகுதியில் கிருஷ்ணா நதி கால்வாயின் குறுக்கே மதகுகள் மற்றும் சத்தியவேடு காட்டில் உள்ள ஓடைகளின் தண்ணீர் புதிய நீர்த்தேக்கத்துக்கு வரும் விதமாக கால்வாய் அமைக்கப்பட்டன. புதிய நீர்த்தேக்கத்துக்கு 7.15 கி.மீ நீளத்துக்குகரை அமைக்கும் பணி, கிருஷ்ணா கால்வாய் ஜீரோ பாயின்ட் அருகே இருந்து நீர்த்தேக்கம் வரை 8.6 கி.மீ தூரத்துக்கு கால்வாய் மற்றும் விளைநிலங்கள் பாசன வசதி பெற ஏதுவாக 5 மதகுகள், ஆந்திரா மற்றும் தமிழக பகுதிகளில் இருந்துவரும் மழைநீர், நீர்த்தேக்கத்துக்கு வருவதற்காக உள்வாங்கிகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. சென்னை குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்துக்கு அனுப்ப ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள உள்வாங்கி கோபுரம், நீர்த்தேக்க கரை கைப்பிடி சுவர்கள் உள்ளிட்ட பகுதிகளில் வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த  நீர்த்தேக்கத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா  தொடங்கி வைக்கிறார்.

இந்த நிலையில், புதிய நீர் தேக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தியதற்காக பலருக்கு பணம் தரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. மேலும், இந்த திட்டம் சென்னை குடிநீர் தேவைக்காக மட்டுமே விநியோகம் செய்யப்படும் என்பதால் விவசாயிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புதிய நீர்தேக்க திட்டத்துக்காக 800.65 ஏக்கர் பட்டா நிலமும், 629.92 ஏக்கர் புறம்போக்கு நிலமும், 54.59 ஏக்கர் வனத்துறை நிலமும் என மொத்தம் 1485.16 ஏக்கர் நிலம் கடந்த 2014 கையகப்படுத்தப்பட்டது. மொத்தம் உள்ள 840 பட்டாதாரர்களுக்கு 91.16 கோடி ஒதுக்கீடு செய்து 578 பேருக்கு 54.31 கோடி வழங்கப்பட்டு நிலப்பிரச்னை சம்பந்தமாக 262 பேருக்கு 36.35 கோடி நீதிமன்ற வைப்பில் வைக்கப்பட்டன. கண்ணன் கோட்டை கிராமத்தை சேர்ந்த பட்டாதாரர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நில எடுப்பு சட்டம் 2013ன் படி நில மதிப்பீடு மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதின் பேரில் 2018 ஏப்ரல் மாதத்தில் சுமார் 41.90 கோடி மற்றும் 27.15 கோடி கடந்த 2018 ஜூலை, ஆகஸ்ட் மாதததில்  தனித்தனியாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு மொத்தம் 69.05 கோடி கூடுதல் தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த தாமத இழப்பீட்டுக்கு வட்டி தொகை கேட்டு வழக்கு தொடரப்பட்டன.

அதன்பேரில், 37.33 கோடி வட்டி தொகை தரப்பட்டுள்ளது. இந்த நீர் தேக்கம் மூலம் தினமும் 65 எம்எல்டி குடிநீருக்கு தரப்படுவது மட்டுமின்றி பாசன தேவைக்காக விநியோகிக்கப்படுகிறது. எனவே, இந்த ஏரிகளை நம்பியுள்ள 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி ஏற்படுத்தி தரப்படும். இதன் மூலம் மழைக்காலத்தில் கடலில் வீணாக கலக்கும் உபரி நீர் தேக்கி வைக்கப்பட்டு, மாநகர மக்களின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

76 ஆண்டுகளுக்குப்பிறகு...
சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் திருவள்ளூர் அடுத்த பூண்டியில் நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. 76 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது புதிய நீர்த்தேக்கம் கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக 380 கோடியில் இந்த புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
* இந்த நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கன அடி நீரை சேமிக்க இயலும்.
* சென்னை மாநகருக்கு தினமும் 65 எம்எல்டி நீர் விநியோகம் செய்யப்படும்.
* நீர்தேக்கத்துக்காக நிலம் கையகப்படுத்தியதற்காக பலருக்கு பணம் தரவில்லை என்ற புகார் உள்ளது.
* சென்னை குடிநீர் தேவைக்காக மட்டுமே விநியோகம் என்பது விவசாயிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : reservoir ,lakes ,Chennai ,Kannan Kottai-Thervaikandikai , Connecting the Kannan Fort-Thervaikandikai lakes New reservoir ready for Chennai drinking water
× RELATED திண்டுக்கல் குடிநீருக்கு பயன்படும்...