×

ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து வரும் பொழுது போக்கு இடங்கள்: வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மலைவாழ் மக்கள்

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இங்கு பல்வேறு இடங்களை கண்டு ரசிப்பதற்கு தமிழகம் உட்பட கர்நாடகம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், இங்குள்ள நிலாவூர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு மலைவாழ் மக்களின் புகழ்பெற்ற கதவநாச்சியம்மன் கோயில் உள்ளது. இதன் அருகே போட்ஹவுஸ் மற்றும் பூங்காவும் செயல்பட்டு வந்தது. அவ்வாறு செயல்பட்ட போட் ஹவுஸ், வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக இயங்கி வந்தது.

இதையடுத்து அப்பகுதியில் சுற்றியுள்ள மலைவாழ் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக தங்களது நிலத்தில் விளைத்த பயிறு வகைகளை, போட் ஹவுஸ் அருகே கடை வைத்து சுற்றுலா பயணிகளுக்கு விற்று வந்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு பூங்கா மற்றும் போட் ஹவுஸ் ஆகியவற்றை அரசு குத்தகைக்கு விட்டது. இந்நிலையில், மகளிர் சுய உதவிக்குழுவினர் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை சரிவர செலுத்தாததால், போட் ஹவுஸ் மற்றும் பூங்கா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் பூங்கா மற்றும் போட் ஹவுஸ் பராமரிப்பின்றி செடி, கொடிகளால் புதர் மண்டி காட்சியளிக்கிறது.

மேலும் அங்குள்ள அலுவலக கட்டிடம், கேன்டீன் உள்ளிட்ட கட்டிடங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும், போட் ஹவுஸ் உள்ளதாக நம்பி வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். தொடர்ந்து ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா தலங்கள் பராமரிப்பின்றி கிடப்பதால் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. இதன்காரணமாக தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மலைவாழ் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறியதாவது: சென்னைக்கும் பெங்களூருக்கும் இடையில் அமைந்துள்ள ஏலகிரி மலை, ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்பட்டு பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிரப்பித்தது. இதன்காரணமாக கடந்த சில மாதங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது. மேலும், தற்போது ஊரடங்கில் அரசு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும், ஏலகிரி மலையில் உள்ள பொழுது போக்கு இடங்கள் இன்றும் திறக்கப்படாமல் மூடி கிடக்கிறது.

இதனால் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், போட் ஹவுஸ், பூங்கா போன்ற பொழுது போக்கும் இடங்கள் மூடி கிடப்பதால் ஏமாற்றமடைகின்றனர். இதன்காரணமாக எங்களின் வாழ்வாதரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள், 10 ஆண்டுகளாக மூடிகிடக்கும் போட் ஹவுஸ், பூங்கா மற்றும் ஏலகிரி மலையில் உள்ள பொழுது போக்கு இடங்களை விரைவில் சீரமைத்து சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதனால் எங்களின் வாழ்வதாரமும் மேம்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : places ,hills ,Yelagiri ,hill , Yelagiri Hills, a destination for the poor, has been in a state of disrepair for 10 years.
× RELATED வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும்...