×

கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள் திறக்கும் முன்னர் குமரியில் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படுமா?

நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள் திறக்கும் முன்னர் இந்த முறை பாசன கால்வாய்கள் தூர்வாரப்படுமா? என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ என்று இரு பருவ காலங்களில் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். கும்ப பூ பருவத்திற்கு தண்ணீர் விநியோகம் முடிந்த பின்னர் பிப்ரவரி மாதம் இறுதியில் அணைகளில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டு அணைகள் மூடப்படும்.

பின்னர் ஏப்ரல், மே மாதங்களில் கால்வாய்கள் சீர் செய்தல், உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிரந்தர சீரமைப்பு செய்தல் மற்றும் கால்வாய்கள் முழுவதும் தூர்வாரப்படும் பணிகள் நடைபெறும். ஜூன் மாதம் முதல் தேதி பாசனத்திற்கு அணைகள் திறக்கப்படும். கன்னிப்பூ சாகுபடிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும். கோதையாறு இடதுகரை கால்வாய், பாண்டியன் கால், பிபி சானல், தோவாளை சானல், என்.பி சானல் போன்ற கால்வாய்களும், அவற்றின் கிளை கால்வாய்களும் தூர்வாரப்படும்.

கால்வாய்களில் தண்ணீர் விநியோகம் தடைபடுகின்ற காலங்களில் கால்வாய்கள் பல இடங்களிலும் புதர் மண்டியும், மண் நிரம்பியும், குப்பை குவியல்கள் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால் அணைகளில் தண்ணீர் திறந்துவிட்டதும் குப்பைகள் மடைகளை அடைத்து கால்வாய்களில் உடைப்பு ஏற்படும்.இதனை தவிர்க்கவும், வேகமாகவும், கடைவரம்பு பகுதி வரை தண்ணீர் கிடைக்கவும் கால்வாய்கள் தூர்வாரப்படுகிறது.

நெல் சாகுபடி பரப்பு குறைந்துள்ள நிலையில் வாழை, தென்னை போன்ற பயிர்களுக்கும், நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கவும் கால்வாய்களில் பாய்கின்ற தண்ணீர் உதவுகிறது. கடந்த காலங்களில் கடைவரம்பு வரை தண்ணீர் விநியோகம் நடைபெற வில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் இதனால் பயிர்கள் கருகுகின்ற நிலையும் பல பகுதிகளில் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். மேலும் இரட்டைக்கரை சானல் உள்ளிட்ட கால்வாய்களில் முழுமையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாத நிலையும் ஏற்பட்டது.

நடப்பாண்டில் மார்ச் மாதம் 20ம் தேதி வரை பல பகுதிகளில் பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், ஜூன் மாதம் 1ம் தேதி அணைகள் திறக்க வேண்டியிருப்பதாலும் மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கு முன்னர் கால்வாய்கள் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் இந்த ஆண்டு முழுமையாக அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

The post கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள் திறக்கும் முன்னர் குமரியில் பாசன கால்வாய்கள் தூர்வாரப்படுமா? appeared first on Dinakaran.

Tags : Kumari ,NAGARGO ,KUMARI DISTRICT ,
× RELATED கடுமையான வெப்பத்தை அனுபவிக்கிறோம்...