×

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதி: தமிழக அரசு

சென்னை : தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடித்து குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.   

அதன் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.   ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வழிபாடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  கொரோனா நோய் தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் பணிகள் முடிவுற்றும், பல மாதங்களாக குடமுழுக்கு செய்ய முடியாமல் தடைபட்டு உள்ளதாகவும், குடமுழுக்கு செய்ய அனுமதிக்க வேண்டுமெனவும் பல கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.

 இவ்வாறு பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் 16.11.2020 முதல், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் வகையில் குடமுழுக்கு விழா நடத்த அனுமதிக்கப்படுகின்றது.    கொரோனா தொற்று ஏற்படாவண்ணம் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்து இவ்விழாக்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : festival ,temples ,Government of Tamil Nadu , Temple Function, Crescent Festival, TN Temples,
× RELATED ஊத்துக்கோட்டை அருகே சிவன் கோயில்களில் பிரதோஷ விழா