×

மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய ஒரு மாதம் வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வருகிற 16ம் தேதி வெளியிடப்படுவதை தொடர்ந்து, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகளை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வருகிற 16ம் தேதி (திங்கள்) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். இதைத்தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை ஒரு மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நவம்பர் 21 மற்றும் 22ம் தேதி (சனி. ஞாயிறு), டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாமும் நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறுவதையொட்டி கடந்த மாதம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் கடந்த வாரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி நேற்று மாலை 3 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 16ம் தேதி வெளியிடுவதற்கான பணிகளை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது குறித்தும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன் இறந்தவர்கள் மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்களின் பெயர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடமும் கேட்டுக் கொண்டார். அதேபோன்று, நவம்பர் 16ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதியுடன் 18ம் தேதி நிறைவடைபவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.

Tags : Chief Electoral Officer Consultation ,Tamil Nadu , Chief Electoral Officer Consults with District Collectors Publication of Draft Voter List on 16th in Tamil Nadu: One month opportunity to add or remove names
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...