×

வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை, விவசாயிகளுக்கு உர மானியம் உட்பட 2.65 லட்சம் கோடிக்கு சலுகை திட்டம்

* வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு 2 ஆண்டுக்கு ஓய்வு நிதி பங்களிப்பு இலவசம்

புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று 2.65 லட்சம் கோடிக்கான சலுகை திட்டங்களை அறிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்கும் வகையில் மத்திய அரசு  சலுகை தொகுப்பு திட்டங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில், மத்திய  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மதியம், டெல்லியில் உள்ள தேசிய ஊடக  மையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்புகள்  வருமாறு:   கொரோனா தாக்கத்தில் இருந்து நாம் மீண்டு வருகிறோம்.  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தில் இருந்து 4.89  லட்சமாக குறைந்து விட்டது. உயிரிழப்பு விகிதம் 1.47 சதவீதமாக  குறைந்துள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

* ரோஜ்கர் திட்டத்தின் கீழ், பிஎப் அமைப்பில் பதிவு செய்த  நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு எடுத்தால், 2 ஆண்டுகளுக்கு ஓய்வு நிதி பங்களிப்பை மத்திய அரசு மானியமாக வழங்கும். ஊழியர் செலுத்த வேண்டிய 12 சதவீதம், நிறுவனம் செலுத்தும் 12 சதவீதம் (மொத்தம் 24 சதவீதம்) தொகையை மத்திய அரசு செலுத்தும். இச்சலுகையை பெறுவதற்கு ஊழியர்களின் மாதச் சம்பளம் ₹15,000க்கு கீழ் இருக்க வேண்டும். கடந்த மார்ச் 1ம் தேதியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதத்துக்குள் வேலை இழந்தவர்கள் அல்லது அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பு வேலை பெற்றவர்களாக இருக்க வேண்டும். இந்த திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை அமலில் இருக்கும்.

* அவசர  கால கடன் உத்தரவாத திட்டம், 2021ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை  நீட்டிக்கப்படுகிறது. அதோடு, கடன் காலம் 5 ஆண்டுகளாக இருக்கும். இதில்  மூலதன தொகையை திரும்பிச் செலுத்துவதற்கு, ஓராண்டு காலத்துக்கு தவணை  ஒத்திவைப்பு சலுகையும் உண்டு.
 இந்த திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி  29ம் தேதியின்படி, ₹50 கோடி வரை கடன் நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள்,  நிலுவையில் உள்ள கடனில் 20 சதவீதம் வரையிலான தொகைக்கு கூடுதல் கடன்  பெற்றுக் கொள்ளலாம். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்,  வர்த்தக நிறுவனங்கள், வர்த்தக தேவைக்காக வாங்கும் தனி நபர் கடன்கள் மற்றும்  முத்ரா திட்டத்தில் கடன் வாங்குவோருக்கு இந்த திட்டத்தில் பலன்  பெறுவார்கள்.

* கட்டுமான மற்றும் உள் கட்டமைப்புக்கு,   அரசு டெண்டர்களில் முன்வைப்புத் தொகை மற்றும் செயல் உத்தரவாத தொகையில் 3  சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது முன்பு 5 முதல் 10 சத.வீதமாக இருந்தது.  டெண்டர்களுக்கு முன்வைப்புத்தொகை தேவையில்லை.
* பொருளாதார  மந்தநிலை காரணமாக வீடுகளின் விலை குறைந்து விட்டது. எனவே,  குடியிருப்புகளுக்கான ரியல் எஸ்டேட் துறையை ஊக்குவிக்கும் வகையில்,  கட்டுமான நிறுவனங்கள் மற்றும் வீடு வாங்குவோருக்கு வரிச்சலுகை  வழங்கப்படுகிறது. இதற்கேற்ப வருமான வரி சட்டத்தில் உரிய திருத்தங்கள்  கொண்டுவரப்படும்.
* தேசிய முதலீடு மற்றும் உள் கட்டமைப்பு நிதி  1.10 லட்சம் கோடி. இதில் இதுவரை 2,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.  மத்திய அரசு பங்கு முதலீடாக 6,000 கோடி மேற்கொள்ளும். எஞ்சியவை தனியார்  முதலீட்டாளர்கள் மூலம் திரட்டப்படும்.
* விவசாயத்துக்கு ஆதரவு  அளிக்கும் வகையில், உர மானியமாக 65,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.  இது எதிர்வரும் அறுவடை சீசனில் விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் உரங்கள்  கிடைப்பதை உறுதிப்படுத்தும். மானிய விலையில் உரங்கள் சப்ளை அதிகரிக்கப்படுவதால், 14 கோடி விவசாயிகள் பலன் பெறுவார்கள்.
* கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டம் மூலம் நடப்பு நதியாண்டில் 10,000 கோடி  ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது வேலை உறுதி திட்டம் மற்றும் கரீப் கல்யாண்  திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். ஊரக வேலை வாய்ப்பை பொறுத்தவரை  பிரதமரின் கரீப் கல்யாண் ரோஜ்கார் திட்டம்  நாடு முழுவதும் 116  மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் கரீப் கல்யான்  ரோஜ்கார் திட்டத்துக்கு  கூடுதலாக 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது  கிராம பொருளாதாரத்தை  மேம்படுத்த உதவும்.  

மூலதனம் மற்றும் இதர தொழில்துறை ஊக்குவிப்பு  திட்டங்களுக்காக பட்ஜெட்டில்   10,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதில் தொழில் துறை ஊக்குவிப்பு,  உள் கட்டமைப்பு மேம்பாடு, பசுமை எரிசக்தி  ஆகியனவும் அடங்கும். இந்திய  மேம்பாடு மற்றும் பொருளாதார உதவி திட்டத்தின்  கீழ், இந்திய அரசுக்கான கடன்  வாங்கும் வரம்பை எக்சிம் வங்கி  அதிகரித்துள்ளது. இதன்படி இந்த வங்கி 3,000  கோடி வழங்க உள்ளது. மொத்தமாக, நேற்று மட்டும் 2,65,080  கோடிக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவுக்கு 900 கோடி நிர்மலா சீதாராமன் மேலும் சில துறைகளுக்கு அறிவித்துள்ள நிதி ஒதுக்கீடு விவரங்கள் வருமாறு:
* ஊரக  வேலை வாய்ப்பை அதிகரிக்க 10,000 கோடி.
* அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு  18,000 கோடி.
* கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டுக்கு 900 கோடி.
* தொழில்துறை உள் கட்டமைப்புகளுக்கு 10,200  கோடி.
* உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்துக்கு  1,45,980 கோடி.
* உர மானியத்துக்கு 65,000 கோடி.

Tags : home buyers , 2.65 lakh crore concession scheme including tax concession for home buyers and fertilizer subsidy for farmers
× RELATED குறைந்த விலையில் வீடு...