×

பவானிசாகர் வனத்தில் பெண் யானை பலி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பவானிசாகர் வனச்சரகம் சுஜ்ஜல்குட்டை வனப்பகுதியில் நேற்று காலை பவானிசாகர் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றபோது, குண்டுக்கல் பள்ளம் என்ற இடத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் யானை இறந்து கிடப்பதை பார்த்தனர். இது குறித்து உடனடியாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட வன அலுவலர் அருண்லால், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் நிஹார்ரஞ்சன் அறிவுரையின் பேரில், யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். பவானிசாகர் வனச்சரக அலுவலர் மனோஜ்குமார் முன்னிலையில், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வன கால்நடை மருத்துவர் அசோகன் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்தது சுமார் 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை என்பது தெரியவந்தது. யானையின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளுக்கு பின் யானையின் இறப்புக்கான காரணம் பற்றி தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். யானையின் உடல் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவாக வனப்பகுதியில் அப்படியே விடப்பட்டது.

Tags : forest ,Bhavani Sagar , Bhavani Sagar, in the forest, female elephant, killed
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...