×

தேசிய அளவில் சிறந்து விளங்கும் மாநகராட்சிகளில் மதுரைக்கு 2வது இடம்

மதுரை: தேசிய அளவில் சிறந்து விளங்கும் மாநகராட்சிகளில், மதுரை மாநகராட்சிக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. இதற்காக புதுடெல்லியில் நடைபெறும் விழாவில், மாநகராட்சி கமிஷனர் விசாகன் விருதை பெறுகிறார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் 33 ஊரணிகள் உள்ளன. அதில் தனியார் பங்களிப்புடன் 11 ஊரணிகள் தூர்வாரி புனரமைக்கப்பட்டது. தவிர, 16 ஊரணிகளில் தூர்வாரி, புனரமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. மீதமுள்ள 6 ஊரணிகள் தூர்வாரப்பட உள்ளன. மேலும் மாரியம்மன் தெப்பக்குளத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தல்லாகுளம் திருமுக்குளம், டவுன்ஹால் ரோடு பகுதியில் உள்ள தெப்பக்குளம் ஆகியவற்றில் மழைநீரை தேக்க வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாநகராட்சி பகுதிகளில் 100 வார்டுகளிலும் பயன்படாமல் உள்ள 402 ஆழ்துளை கிணறுகள் கணக்கெடுக்கப்பட்டு, அந்த ஆழ்துளை (போர்வெல்) கிணறுகள் மழைநீர் கட்டமைப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், மழை பெய்தால் தண்ணீர் தேங்கும் 280 இடங்கள் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. வீடுகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு செயலியை தயார் செய்து, அந்த செயலி மூலம் மழைநீர் சேகரிப்பு இல்லாத இடங்கள் கண்டறியப்பட்டு, மழைநீர் சேகரிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியின் இதுபோன்ற தீவிர பணிகளால், மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தில் இருந்து சிறந்த மாநகராட்சியாக தேசிய அளவில் 2ம் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விருது வழங்கும் விழா, புதுடெல்லியில் வரும் நவம்பர் 11 மற்றும் 12ம் தேதியில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன், விருதை பெறுகிறார்.

Tags : Madurai ,corporations ,country , Nationally, Madurai ranks 2nd among the best corporations
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை