×

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரிசி உற்பத்திக்கு பல்வேறு மானியங்கள்: வேளாண் துறை தகவல்

சென்னை: தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், அரிசி உற்பத்திக்கு பல்வேறு மானியங்கள் வழங்கப்படுகிறது என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.  தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு வகைகள், தானியங்கள், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள், எண்ணெய் வித்துகள், மர எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் எண்ணெய் பனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இதில், சிறு, குறு விவசாயிகளுக்கு 33 சதவீத ஒதுக்கீடும், மகளிர் விவசாயிகளுக்கு 30 சதவீத ஒதுக்கீடும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 19 சதவீத ஒதுக்கீடும், பழங்குடியின விவசாயிகளுக்கு ஒரு சதவீத ஒதுக்கீடும், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 எக்டருக்கு மானியமும் வழங்கப்படுகிறது.

 தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரிசி உற்பத்திக்கு நேரடி விதைப்புக்கு எக்டர் ஒன்றிற்கு ₹7500 வழங்கப்படுகிறது. இதை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.  திருந்திய நெல் சாகுபடிக்கு எக்டர் ஒன்றிற்கு ₹7500 வழங்கப்படுகிறது. வறட்சியை தாங்கும் ரகங்கள் சாகுபடிக்கான மானியமாக எக்டர் ஒன்றிற்கு ₹7500 வழங்கப்படுகிறது. நெல் பயிர் சாகுபடிக்கு எக்டர் ஒன்றிற்கு ₹12,500ம், உயர் விளைச்சல் ரக விதைகளுக்கு விநியோக மானியமாக, 10 ஆண்டுகளுக்குட்பட்ட உயர் விளைச்சல் ரக சான்று விதைகளுக்கு 50 சதவீத மானியம் அல்லது கிலோ ஒன்றிற்கு ₹20 இதில் எது குறைவோ அவை வழங்கப்படும்.   

பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டர் ஒன்றிற்கு ₹500 இதில் எது குறைவோ அவை வழங்கப்படுகிறது. நூண்ணூட்ட உரக்கலவைக்கு எக்டர் ஒன்றுக்கு ₹500 மானியமும், களை கொல்லி பயன்படுத்துவதற்கு எக்டர் ஒன்றிற்கு ₹500ம், நீர் இறைக்கும் இயந்திரத்துக்கு 50 சதவீத மானியம் அல்லது இயந்திரம் ஒன்றுக்கு ₹10ஆயிரம் இதில் எது குறைவோ அவை வழங்கப்படுகிறது.  பயிர் சாகுபடி முறை அடிப்படையிலான பயிற்சிக்கு அமர்வு ஒன்றிற்கு ₹3500 வீதம் பயிற்சி ஒன்றுக்கு ₹14,000 வழங்கப்படுகிறது. பசுந்தாள் உர விதைகளுக்கு எக்டர் ஒன்றுக்கு ₹2500ம் வழங்கப்படுகிறது. இந்த மானியங்களை பெற கிராம, வட்டார, மாவட்ட அளவிலான வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

Tags : Department of Agriculture Information , National Food, Rice Production, Subsidies, Department of Agriculture Information
× RELATED கோடை பருவத்திற்கு தேவையான 2.10 லட்சம்...