×

மண்டல, மகரவிளக்கு பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் புஷ்பாபிஷேகம் ரத்து

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் புஷ்பாபிஷேகம் நடத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல, மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 15ம் தேதி திறக்கப்படுகிறது. 16ம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். ஆன்-லைன் மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். மண்டல கால தொடக்கத்தில் ஒருநாளில் 1,000 பேரும், சனி, ஞாயிறு நாட்களில் 2,000 பேரும் அனுமதிக்கப்படுவர். அடுத்த கட்டத்தில் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனம் செய்யலாம். சபரிமலை ஐயப்பன் கோயில் புஷ்பாபிஷேகத்துக்கான மலர்கள் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் இருந்து வரவழைக்கப்படும். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டு மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் புஷ்பாபிஷேகம் நடத்தப்படாது. ஆனால் அஷ்டாபிஷேகம் நடத்தப்படும். இதற்கான பொருட்களை தேவஸம்போர்டு வழங்கும்.

பக்தர்கள் இருமுடி கட்டுகளில் கொண்டுவரும் நெய்த்தேங்காய்கள் சிறப்பு கவுன்டர்கள் மூலம் சேகரிக்கப்படும். அதற்குப்பதிலாக ஏற்கனவே அபிஷேகம் செய்து தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ள நெய் பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நெய்த்தேங்காய்கள் அவ்வப்போது உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இதுபோல சபரிமலை வரும் பக்தர்கள் வடசேரிக்கர - பம்பை மற்றும் எருமேலி - பம்பை ஆகிய 2 முக்கிய பாதைகள் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

பொதுவாக மண்டல, மகரவிளக்கு பூஜை காலத்தில் தினமும் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பக்தர்கள் வருகை தருவர். ஆனால் இந்த ஆண்டு 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சன்னிதானம், பம்பை, நிலக்கல், எருமேலி போன்ற இடங்களில் வாகன பார்க்கிங், தற்காலிக கடைகள், கழிப்பறை, ஸ்டுடியோ, தேங்காய் விற்பனை போன்ற இனங்களுக்கான ஏலம் எடுக்க ஆட்கள் இல்லை. 2 முறை இ-டென்டர் விட்டும் பலன் இல்லை. இதனால் இனி பொது ஏலம் விடப்படும் என தெரிகிறது.

Tags : Pushpabhishekam ,Capricorn Lantern Puja ,Sabarimala Iyappan Temple , Sabarimala, Iyappan
× RELATED சபரிமலையில் நடைபெற்ற புஷ்பாபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்பு