×

வங்கதேச எம்பி கொலை; இளம்பெண் மூலம் வரவழைத்து தீர்த்துக்கட்டிய அமெரிக்க நண்பர்: உடலை கூறுபோட்ட கசாப்புக்கடைக்காரர்

கொல்கத்தா: வங்கதேசத்தை சேர்ந்த எம்பி அன்வருல் அசீம் அனார் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 12ம் தேதி கொல்கத்தா வந்தார்.அதன்பின் மாயமானார்.விசாரணையில் எம்பி அன்வருல் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். எம்பியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து பல்வேறு இடங்களில் வீசியிருப்பது அம்பலமானது. மேலும் பிரிட்ஜில் இருந்த உடல் பாகங்களை போலீசார் பறிமுதல் செய்து சோதனைக்கு அனுப்பினார்கள்.

இந்நிலையில் கொலை வழக்கு தொடர்பாக பங்கார் பகுதியில் ஜிகாத் ஹவ்லாதார் என்ற வங்கதேசத்தை சேர்ந்த நபரை சிஐடி போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் ஒரு கசாப்புக்கடைக்காரர். எம்பியை கொலை செய்வதற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் வந்து தங்கி இருந்துள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் மேலும் பல உண்மைகள் தெரியவந்துள்ளது. எம்பியின் அமெரிக்க நண்பர் அக்தருஸ்ஸாமான் சொன்னதால் ஹவ்லாதார் கொல்கத்தா வந்துள்ளார். அவரும் வங்கதேசத்தை சேர்ந்த மேலும் 4 பேரும் சேர்ந்து எம்பி அன்வருலை கொலை செய்துள்ளனர்.

இதற்காக அக்தருஸ்ஸாமான் ரூ.5 கோடி கொடுத்தது அம்பலமாகியுள்ளது. எம்பியை பெண் ஆசைகாட்டி ஏமாற்றி அழைத்து சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் ஆசை காட்டிய சிலாஸ்டி ரஹ்மான் என்பவரும் டாக்கா போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். மேலும் சிசிடிவியில் எம்பி பெண் ஒருவருடன் குடியிருப்புக்கு செல்லும் காட்சிகளும் பதிவாகி உள்ளது. கைதான ஹவ்லாதார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 12 நாள் சிஐடி போலீசார் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொலையில் தொடர்புடைய 3 பேர் வங்கதேச போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

The post வங்கதேச எம்பி கொலை; இளம்பெண் மூலம் வரவழைத்து தீர்த்துக்கட்டிய அமெரிக்க நண்பர்: உடலை கூறுபோட்ட கசாப்புக்கடைக்காரர் appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,Kolkata ,Anwarul Aseem Anar ,Anwarul ,Dinakaran ,
× RELATED வங்கதேச எம்பி கொலை மே. வங்கத்தில் கால்வாயில் இருந்து மனித எலும்பு மீட்பு